சென்னையில் நடப்பாண்டில் அதிக பார்வையாளர்களை கொண்ட படமாக “3”  தேர்வாகியுள்ளதாக பிரபல தியேட்டரான கமலா சினிமாஸ் தெரிவித்துள்ளது. 


2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இந்தாண்டில் நடைபெற்ற சம்பவங்கள் எல்லாம் ரீவைண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சினிமாவில் எண்ணற்ற சாதனைகள் எல்லாம் துறை வாரியாக பட்டியலிடப்பட்டு வருகிறது. அதேசமயம் தியேட்டர் நிர்வாகமும் தனித்தனியாக தங்கள் தியேட்டர்களில் அதிக வசூலை குவித்த படங்கள், அதிக பார்வையாளர்களை பெற்ற படங்களின் விவரங்களை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து வருகிறது. 


இப்படியான நிலையில் பெரும்பாலான தியேட்டர்களில் 2023 ஆம் ஆண்டு அதிக வசூலை குவித்த படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் நடிகர் விஜய்யின் லியோ படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் அவர் நடித்த வாரிசு திரைப்படம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அஜித்தின் துணிவு படமும் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு பிரபலங்களின் ரசிகர்களும் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். 


இதனிடையே நடப்பாண்டில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் பழைய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்ட காலம் போய் பல படங்கள் இந்த பந்தயத்தில் களம் கண்டது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “3” படம் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 






இந்த படத்துக்காக ரூ.50, ரூ.100 என்ற சலுகை விலையில் டிக்கெட் விற்கப்பட்டது. தீபாவளிக்குப் பின் ரிலீஸான படங்கள் பெரிய அளவில் செல்லாத நிலையில் இந்த படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் தியேட்டர் நிர்வாகமே எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. டிக்கெட்டுகள் கிடைக்காமல் இளம் வயது ரசிகர்கள் சோகமடைந்தனர். ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்க காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 


கிட்டதட்ட ஒரு மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கமலா சினிமாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில் அதிகம் பார்வையாளர்களை கொண்ட படம் என்ற பெருமையையும் “3” பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷ் தியேட்டர் உரிமையாளரை தொடர்பு கொண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதை பாராட்டியதாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


3 படம் 2012 ஆம் ஆண்டு வெளியான சமயத்தில் பெரிய வெற்றியை எல்லாம் பெறவில்லை. அனிருத் இப்படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதேசமயம் தனுஷ் நடிப்பில் இந்தாண்டு வெளியான வாத்தி படம் தோல்வியடைந்த நிலையில் 3 படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.