29 திரைப்பட விமர்சனம் 

விவசாய பட்ட படிப்பு படித்து சம்பந்தமில்லாத ஒரு வேலையை செய்து வருகிறார் நாயகன் விது. 29 வயதாகியும் வேலை திருமணம் என எதிலும் தெளிவில்லாமல் இருக்கும் விது வாழ்க்கையில் நாயகி  ப்ரீத்தி என்ட்ரி கொடுக்கிறார். ஒரு அழகான பெண்ணின் காதலன் என்பதையே தனது அடையாளமாக மாற்றிக்கொள்கிறார். ஆனால் ஐ.எஸ்.எஸ் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் நாயகிக்கு லட்சியமே இல்லாத ஒரு நாயகனுக்கும் எப்படி செட் ஆகும். இருவரும் பிரிகிறார்கள். காதல் தோல்வியில் விது தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயல்கிறார். அதில் சில பிரச்சனைகளும் வருகின்றன. நாயகன் வெற்றிபெற்றாரா. பிரிந்த அவரது காதல் சேர்ந்தனா என்பதே 29 திரைப்படத்தின் கதை. 

Continues below advertisement

முதல் பாதி முழுக்க ரொமாண்டிக் திரைப்படமாக செல்ல இரண்டாம் பாதியில் படம் சோசியல் மெசேஜ் , ஹீரோ வில்லன் பாணியை கடைபிடிக்கிறது படம். இதனால் ஒரே படத்தில் பல ஜானர்களை பார்த்த ஒரு கலவையான அனுபவமே ஏற்படுகிறது.  முதல் பாதியில் காதல் காட்சிகளை இயக்குநர் மனதிற்கு மிக நெருக்கமான தருணங்களாக உருவாக்கியுள்ளார். நாயகி ப்ரீத்தியின் கதாபாத்திரத்தின் வழி காதலிக்கும் பல பெண்களின் மனசாட்சியை  மிக அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். வெளியில் பேசுவதை விட மண்டைக்குள்ளேயே பேசும் நாயகன் கதாபாத்திர வடிவமைப்பிலும் சில புதுமைகள் இருக்கதான் செய்கின்றன

ஆனால் ஒரே படத்தில் திரைக்கதை ரீதியாக பல்வேறு பரிசோதனைகளை இயக்குநர் செய்திருக்கும் முயற்சி படத்திற்கு கைகுடுக்கவில்லை. உதாரணமாக முதல் பாதியில் ஹீரோ ஹீரோயின் முதல்முறை பார்த்துக் கொள்ளும் காட்சிக்கு அடுத்தபடியாக அவர்கள் இருவரும் காதலை சொல்லும் காட்சிக்கு தாவுகிறார். 2010 இல் சென்னையில் மேன்சன் வாழ்க்கையை மறுபடியும் இந்த படத்தில் கொண்டு வந்திருப்பது பெரியளவில் நினைவில் நிற்கவில்லை. இயக்குநர் ரத்னகுமாருக்குள் இரண்டு விதமான கதைசொல்லிகள் மாறி மாறி இந்த கதையை எழுதியது போல் உள்ளது. ஒருவர் கவித்துவமான வரிகளை சொல்லும் , உருகி உருகி காதல் செய்யும் லவ்வர் பாய். மற்றொருவர் பெண்கள் மீது பழித்தூற்றும் , இரட்டை அர்த்த ஜோக் சொல்லும் சாமானிய இளைஞர். இடைவேளைக்கு முந்தைய காட்சியில் , பிரேக் அப் செய்துகொள்ளும் காட்சிகளை இயல்பாக விடாமல் வழிந்து திணித்து நகர்த்தியிருக்கிறார். இத்தனையையும் தாண்டி ஒவ்வொரு காட்சியிலும் வாய்ஸ் ஓவர் மூலம் வாழ்க்கை பற்றியோ , காதலைப் பற்றியோ , காமத்தைப் பற்றியோ  கூடுதலாக கருத்து சொல்வதற்கு இயக்குநருக்கு இருந்துகொண்டே இருக்கிறது. கிரியேட்டிவிட்டியை கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள் ரத்னா.

Continues below advertisement

முதல் பாதி காதலும் அது சார்ந்த பிரச்சனைகளையும் பேசியது என்றால் இரண்டாம் பாதி வழக்கமான நாயக மீட்சி தருணங்களால் நிறைந்துள்ளது. அப்படி இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு இல்லை ஆனால் அதே ஹீரோ வில்லன் டெம்பிளேட் இல்லாமல் கொஞ்சம் புதுசா ஏதாவது ட்ரை பண்ணிருக்கலாம். 

நாயகனாக நடித்துள்ள விது மிக இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில் அவரது நடிப்பை பார்க்கவிடாமல் அந்த மோசமான மேக் அப் மறைத்துவிடுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் ப்ரீத்தி அஸ்ரானியின் இருப்பும் நடிப்பும் தான். க்யூட் மற்றும் கிரிஞ்ச் இடையில் ஒரு மெல்லிய கோடு தான். அதனை ப்ரீத்தி தனது நடிப்பில் மிக அழகாக கையாண்டுள்ளார். 

பூபாடல் தவிர மற்ற பாடல்கள் படத்தின் கதையும் பெரிதாக ஒன்றவில்லை. பின்னணி இசை சிறப்பு. 29 மிகவும் பர்ஸனலாக ஒரு படமாக இருந்திருக்க வேண்டிய படம் ஆனால் கதையின் வலிமைக்கு மீறிய சுமையை ஏற்றியுள்ளார் இயக்குநர்.