காதல் இல்லாமல் தமிழ் சினிமாவா? எனும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருப்பது காதல். அப்படி ஏராளமான காதல் படங்களில் காதலுக்கு மரியாதை செய்த படம் 'காதலுக்கு மரியாதை' திரைப்படம். இந்தப்படம் வெளியான நாள் இன்று. எத்தனை காதல் படங்கள் இனி தமிழ் சினிமாவில் வந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் வரலாற்றில் என்றுமே நிலைத்து இருக்கும். அப்படி 25 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் சற்றும் அந்த அந்தஸ்தை விட்டு கீழ் இறங்காத திரைப்படம் 'காதலுக்கு மரியாதை'. 


 



ஷாலினி - விஜய்


 


மரியாதை செய்த படம் :


90'ஸ் களில் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த அஜித், விஜய், பிரஷாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் காதல் படங்கள் வரிசை கட்டி வெளியானதில் மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது  ‘காதலுக்கு மரியாதை’. இன்று ஒரு மாஸ் நடிகராக தமிழ் சினிமா கொண்டாடும் விஜய்யின் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்த படம் இது. மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய இப்படம் மலையாளத்தில் அமோகமான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தமிழில் வெளியானது. குழந்தை நட்சத்திரமாக அனைவரின் பேவரைட் குழந்தையாக நடித்த பேபி ஷாலினி இந்த திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 


 






சினிமா பார்க்காத புதுமை காதல் :


வெவ்வேறு மதத்தை சேர்ந்த ஹீரோ, ஹீரோயின் இருவருமே வீட்டில் செல்ல பிள்ளைகளாக இருக்கையில்,இருவருக்கு இடையில் காதல் மலர்கிறது. வழக்கம் போல காதலுக்கு எதிர்ப்பும் வருகிறது. மதம் காரணமாக காட்டப்படாவிட்டாலும் ஹீரோவுடன் ஏற்கனவே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்களின் காதலை எதிர்க்கிறார்கள் ஹீரோயின் குடும்பத்தினர்.


எதிர்ப்பை மீறி காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறது. பிறகு மனம் மாறி குடும்பத்தை எதிர்த்து இணையக் கூடாது என்று முடிவெடுத்து இருவரும் அவரவர் வீட்டுக்கு செல்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டு குடும்பங்களும் சந்தித்து கொள்ள உணர்வுபூர்வமாக முடிவெடுத்து காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கிறார்கள். படத்தில் கூஸ் பம்ஸ் வரவைத்தது கிளைமாக்ஸ் காட்சி. 


 






 


ராஜாவிற்கு நிகர் ராஜா தான் :
 
படம் முழுக்க அன்பு, பாசம், குடும்பம், நட்பு, பகை என ஒரு சராசரி மனிதனின் வெளிப்பாடாக அமைந்த இப்படம் அனைவரின் மத்தியிலும் கொண்டாடப்பட்டது. விஜய், ஷாலினி மட்டுமின்றி, படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் யதார்த்தமாக சிறப்பாக அமைந்தது. 


இளையராஜாவின் இசை நம்மை படம் முழுக்க ஆக்கிரமித்தது.  ‘ஆனந்த குயிலின் பாட்டு’ பாடல் பார்த்த அனைவருக்கும் இது போல் ஒரு குடும்பம் நமக்கு அமையாத என ஏங்கும் அளவிற்கு ஏக்கத்தை கொடுத்தது.  ‘என்னை தாலாட்ட வருவாளா’ பாடல் இன்றும் காதுகளுக்கு இனிமை சேர்க்கும். மேலும் படத்தின் மற்ற பாடல்களும்  இன்றும் தலைமுறைகளை கடந்து அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறது. ஆபாசம் இல்லாத இந்த காதல் படம், குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து காதலுக்கு மரியாதை செய்த திரைப்படம். 25 ஆண்டுகள் மட்டுமின்றி இந்த உலகில் காதல் உள்ளவரையில் சினிமா உள்ளவரையில் காதலுக்கு மரியாதை திரைப்படம் போற்றப்படும்.