சினிமா திரையுலகத்தை பொறுத்த வரையில் மிக பெரிய விருதாக கருதப்படுவது சர்வதேச அளவில் அங்கீரம் வழங்கப்படும் ஆஸ்கார் விருது. ஒருமுறையேனும் தென்னிந்திய சினிமா அந்த விருதை கைப்பற்றாதா? என்பதுதான் ஒவ்வொரு தென்னிந்திய படைப்பாளிகளின் ஏக்கமாக இருந்து வருகிறது. அப்படி ஒரு அந்தஸ்தை முதன்முதலில் கைப்பற்றியவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். இரண்டு கைகளிலும் இரண்டு ஆஸ்கர் விருதுகளுடன் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். அவரை தொடர்ந்து அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்காக  இசையமைப்பாளராக கீரவாணி பெற்றார். 



சிறந்த வெளிநாட்டு திரைப்படம் :


ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமா கூட்டமைப்பு சார்பில் சிறந்த படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகும் சிறந்த படங்களில் இருந்து ஒரு படம் சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 22 மொழிகளை சேர்ந்த படங்களில் இருந்து ஒரு படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 , மாரி செல்வராஜின் மாமன்னன், வெங்கட் அட்லூரியின் 'வாத்தி', பொன்குமாரின் 'ஆகஸ்ட் 16 , 1947 ' உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுஇருந்தன. 


நல்ல வரவேற்பு :


அந்த வகையில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் '2018'. கேரள மாநிலத்தில் 2018ம் ஆண்டு பெய்த பெரும் மழை வெள்ளம் அந்த மாநிலத்தையே புரட்டிப்போட்டது. பாதிப்பை பற்றியும் அதன் மீட்பு பணிகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தியது. 


வெளியேறிய 2018 :


மலையாளத்தில் வெளியான '2018' படம் ஆஸ்கர் விருதுக்கு அதிகாரபூர்வமாக நாமினேட் செய்யப்பட்டது. இந்திய திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டதை நினைத்து மிகுந்த சந்தோஷத்தில் இருந்த நிலையில் தற்போது இறுதி போட்டியில் இருந்து '2018' திரைப்படம் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மலையாள திரையுலகத்தினருக்கும் ரசிகர்களும் இந்த தகவல் பெரும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.