2024 ஆஸ்கர் விருதுகள்


2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளில் வெளியான படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு மார்ச் 11 ஆம் தேதி விருதுகள் அறிவிக்கப்படும் .


ஆஸ்கரில் இந்தியப் படங்கள்


இந்தியாவில் இருந்து முன்னதாக டொவினோ தாமஸ் நடித்து மலையாளத்தில் வெளியான 2018 படம் பரிந்துரை செய்யப்பட்டது.  2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றதுடன் பாராட்டுகளையும் பெற்றது. மேலும் மலையாளத்தில் வெளியாகிய படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் உருவெடுத்தது.  சிறந்த அயல்மொழி திரைப்படத்தின் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட இந்தப் படம் இறுதி பட்டியல்வரை செல்லாமல் போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் மலையாள திரைப்பட ரசிகர்கள் சோகமடைந்தார்கள். 






இரண்டாவது வாய்ப்பு


இப்படியான நிலையில் 2018 படத்திற்கு தற்போது இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறந்த அயல்மொழி படப்பிரிவில் இருந்து வெளியேறிய இப்படம், உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட 265 படங்களில் ஒன்றாக சிறந்த படத்திற்கான பிரிவில் இன்னும் கடுமையாக போட்டி போட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்ட 12th ஃபெயில் படமும் இந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். 


ஒரு படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டால் அதன் பின் ஒரு படக்குழு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி  2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆந்தனி பேசியுள்ளார். ”ஒரு படம் ஆஸ்கருக்கு தேர்வாகிறது என்றால் அந்தப் படத்தை முதலில் நாம் விளம்பரம் செய்யவேண்டும் . திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு ஒரு பார்ட்டி ஒருங்கிணைத்து அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.


இந்த பார்ட்டியின் யார் யாரை அழைக்க வேண்டும், எந்த நாட்களில் எங்கு படத்தை திரையிட வேண்டும் என்பதை ஒரு  ஏஜெண்ட் நமக்கு தெரிவிப்பார். ஒரு படம் நன்றாக இருந்து அது மக்களுக்கு பிடித்தால் மட்டும் போதாது, அந்தப் படத்தின் இயக்குநரையும் அவர்களுக்கு பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் பிரபல பத்திரிகைகளில் நம் படத்தைப் பற்றிய ஒரு பக்க விளம்பரம் கொடுக்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு மட்டுமே சுமார் 12 லட்சம் செலவாகும்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.