கமல்ஹாசனின் 360 கோன பரிமாணங்களில் ஒன்று அவர் படங்களின் தனித்துவமான நகைச்சுவை. அவருக்கான நகைச்சுவையை உருவாக்குவதற்கு என்றே அவருக்கு கிரேஸி மோகனின் கூட்டணி அதிர்ஷ்டவசமாக வாய்த்திருந்தது.


அப்படி அந்தக் கூட்டணியில் உருவான படங்களில் ஒன்று பம்மல் கே சம்மந்தம். எழுத்து கிரேஸி மோகன் என்றாலும் இயக்கியது நடிகரும் இயக்குனருமான மௌலி. வயிற்றுக்குள் வைத்த வாட்சை வைத்து வரிக்கு வரி காமெடி கலட்டா என ஒரு முழுநேர திரைப்படத்தை உருவாக்கியிருந்தது இந்த மூவர் காமெடி கூட்டணி.


இதுபோன்றதொரு பொங்கல் நாளில்தான் இந்தப் படம் 20 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. இதுகுறித்து இந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்ரனும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ஞாபகங்களைப் பகிர்ந்திருந்தார்.






ஸ்டன்ட் ஆர்டிஸ்ட் சம்மந்தத்துக்கும் டாக்டர் ஜானகிக்கும் இடையே மோதலில் ஆரம்பித்து காதலில் கலந்து கடைசியில் படம் சுபம் என எப்படி எண்ட் கார்ட் போடுகிறார்கள் என்பதுதான் கதை. திருமணமே பிடிக்காத இரண்டு கேரக்டர்கள் எப்படி ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்குகிறார்கள் என்பதை தனக்கேயான நகைச்சுவையுடன் காட்சிபடுத்தியிருப்பார் இயக்குநர்.


தேவாவின் இசையில் அனைத்து ஜானரிலும் பாடல்கள், அத்தனையும் ஹிட். படம் ஹிட் அடிக்கவே அடுத்து இதையே வாய்ப்பாக்கி சிம்ரனுடன் ’பஞ்ச தந்திரம்’ படத்தில் நடித்தார் கமல்.


படம் இந்தியிலும் கம்பத் இஷ்க்  என ரீமேக் ஆனது. அக்‌ஷய் குமார், கரீனா கபூர் நடித்த இந்தி ரீமேக்கில் சில்வஸ்டர் ஸ்டாலன் கெஸ்ட் ரோலில் நடித்தார். நாடக உலகின் பிதாமகர் எனக் கூறப்படும் பம்மல் சம்மந்த முதலியாரை கௌரவிக்கும் வகையில் தமிழில் படத்துக்கு இந்தத் தலைப்பு வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.