தீபாவளி என்றாலே இனிப்பு, புத்தாடை, பட்டாசு எல்லாம் எப்படி  களைகட்டுமோ அதை விட பல மடங்கு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவது தீபாவளி ரிலீஸ் படங்கள். இன்று மட்டுமில்லை என்றுமே தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு ஒரு தனி மவுசுதான். அந்த வரிசையில் 1985-ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி தீபாவளிக்கு எது திரைப்படங்கள் அசத்தலாக வெளியாகின. 


அதிலும் குறிப்பிட்ட நான்கு படங்கள் இன்று வரை முத்திரை குத்தப்பட்ட சூப்பர் ஹிட் கிளாசிக் திரைப்படங்கள். அவை தான் ரஜினிகாந்த் - சிவாஜி நடித்த "படிக்காதவன்" கே. பாக்யராஜ் வித்தியாசமான நடிப்பில் "சின்ன வீடு", கமல்ஹாசனின் நடிப்பில் "ஜப்பானில் கல்யாண ராமன்", சிவகுமாரின் அசத்தலான நடிப்பில் வெளியான 'சிந்து பைரவி'. 



படிக்காதவன் :


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அம்பிகா, ஜனகராஜ், நாகேஷ் என மிகப்பெரிய திரை பட்டாளத்தின் நடிப்பில் வெளியான படம். அண்ணனாக சிவாஜி கணேசனும் தம்பியாக ரஜினிகாந்தும் நடித்த இப்படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். 


சின்ன வீடு : 


கே. பாக்யராஜ் ஒரு விவரமான ஆளு என்பது அவர் இயக்கிய படங்கள்தான் சாட்சி. அப்படி அவர் இயக்கி நடித்த ஒரு படம் தான் 'சின்ன வீடு'. ஜெய்கணேஷ், கே.கே.செளந்தர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் மூலம் தான் நடிகை கல்பனா அறிமுகமானார். 


ஜப்பானில் கல்யாண ராமன் :


பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கமல், ராதா, சத்யராஜ், கவுண்டமணி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் 'ஜப்பானில் கல்யாணராமன்'.  ‘கல்யாண ராமன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியானது. ஜப்பானின் மிகவும் பிரபலமான பொருட்காட்சியான 'எக்ஸ்போ 85 ' இதில் இடம்பெற்றது இப்படத்திற்கு ஒரு தனிச்சிறப்பு. 



சிந்து பைரவி :


இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்திரன் 'சிந்து பைரவி' படத்தை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியுமா என்ன? சிவகுமார், சுஹாசினி, சுலக்‌ஷணா, ஜனகராஜ், டெல்லி கணேஷ் என ஏராளமானோரின் நடிப்பில் வெளியான இப்படம் பாடலுக்காகவே வந்த படம் என்பது போல 'மஹாகணபதிம்' பாடல் துவங்கி 'தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்' என்பது வரையில் அனைத்துமே இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் பிரபலமாக முணுமுணுக்கப்படும் பாடல்கள். 


இந்த நான்கு படங்களுக்கும் உள்ள மிக பெரிய ஒற்றுமை என்றால் அது இசைஞானி இளையராஜாவின் இசைதான் . இந்த நான்கு படங்களின் பாடல்கள் அனைத்துமே மிக பெரிய வெற்றி பாடல்களாக அமைந்தன. ஒரு கூட்டுக்கிளியாக, ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன், வெள்ள மனம் உள்ள மச்சான், மனதில் உறுதி வேண்டும், நானொரு சிந்து, பாடறியேன் படிப்பறியேன் இப்படி எண்ணற்ற ஹிட் பாடல்களை கொடுத்த இளையராஜா வெற்றியின் உச்சியில் இருந்த காலகட்டம். 


தேசிய விருது :


நான்கு படங்களுமே ஹிட் படங்களாக அமைந்தாலும் பாலச்சந்தரின் 'சிந்து பைரவி' திரைப்படம் ஆந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான பிலிம் ஃபேர் விருதையும், சிறந்த இசையமைப்பாளர் (இளையராஜா) , சிறந்த பெண் பாடகி (கே.எஸ்.சித்ரா) மற்றும்  சிறந்த நடிகை (சுஹாசினி) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தேசிய விருதை தட்டி சென்றது. 


யதார்த்தமான திரைக்கதை, வலுவான பாத்திர அமைப்பு, அசத்தலான இசை என ரசிகர்கள் மனங்களில் முத்திரை பதிக்க வைத்த இப்படங்களை காலத்தால் அழிக்கவும் முடியாது கடந்து போகவும் முடியாது.