தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான கஜினி, ரமணா என மிகவும் ஸ்ட்ராங்கான கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். படம் இயக்குவதை தொடர்ந்து 'ஏ.ஆர் முருகதாஸ் புரோடக்ஷன்ஸ்'  என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வந்தார். அப்படி அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியான திரைப்படங்களான 'மான் கராத்தே, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற பல படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. 


 



அந்த வகையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. அவருடன் இணைந்து ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் செளத்ரி இப்படத்தை தயாரித்துள்ளனர். ஏ.ஆர். முருதாஸ் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் பொன்குமார். கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் '1947- ஆகஸ்ட் 16' திரைப்படத்தை இயக்குகிறார் என்.எஸ். பொன்குமார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரேவதி புதுமுக நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.  


சீன் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "கோட்டிக்கார பயலே' பாடல் வெளியாகி ரசிகர்களை வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. 


அந்த வகையில் '1947- ஆகஸ்ட் 16' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. வரும் ஏப்ரல் 7ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது எனும் தகவலை படத்தின் கதாநாயகன் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளியிட்டிருந்தார். இந்த செய்தி கௌதம் கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கௌதம் கார்த்திக். இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   திருமணத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது அவருக்கு கைக்கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.