ஒரு படத்தில் ஒரே நடிகர் இத்தனை வேஷங்கள் மூலம் வித்தியாசங்கள் காட்ட முடியும் என்றால் அது ஒரே ஒருத்தரால் மட்டுமே சாத்தியம். அது தான் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பை கரைத்து குடித்த இந்த கலைஞனுக்கு வேஷம் போடுவது எல்லாம் பபுள்கம் சாப்பிடுவது போல தான். அபூர்வ சகோதரர்கள் படத்தில் முடியை மடக்கி குட்டி அப்புவாக அவர் நடித்ததை இன்று நினைத்து பார்த்தாலும் அது நிஜமா என அசர வைக்கிறது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடிக்க கமலால் மட்டுமே முடியும். இரண்டு, மூன்று, நான்கு கெட்டப் எல்லாம் போட்ட கமல்ஹாசனை பிரம்மாண்டமான மேடையில் பத்து கதாபாத்திரத்தில் உயர்த்தி வைத்து கொண்டாடியது 'தசாவதாரம்' திரைப்படம் . இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



கமல் - கே.எஸ். ரவிக்குமார் காம்போவில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களான அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி என்ற வரிசையில் அடுத்ததாக சேர்ந்த படம் தசாவதாரம். இவர்கள் கூட்டணி என்றுமே ஒரு வெற்றி கூட்டணியாக அமையும் என்பதை நிரூபித்த படம். ஹாலிவுட் படத்திற்கு நிகரான ஒரு படமாக அவதாரம் எடுத்தது. வைஷ்ணவத்தில் ஆழ்ந்த பக்தராக கம்பீரமாக தோற்றமளித்த ராமானுஜ தாசன், அமெரிக்க அதிபர், குள்ள அப்புவாக மட்டுமல்ல நெட்டையான ஆளாகவும் என்னால் மாற முடியும் என்பதை நிரூபிக்கும் இஸ்லாமியர், புத்திசாலித்தனமான கோவிந்த், வயதான தோற்றத்தில் கிருஷ்ணவேணி பாட்டி, வட இந்திய பாடகர், சமூக அக்கறை கொண்ட பூவராகன், வெள்ளைக்கார கமல், ஜப்பானிய கமல், தெலுங்கும் தமிழும் சேர்ந்த கலவையாக பல்ராம் நாயுடு என பத்து வகையான மாறுபட்ட கதாபாத்திரங்கள், அவர்களின் உடல் மொழி, பேசும் தோரணை, கெட்டப் என அனைத்திலும் மலைத்து பார்க்கும் அளவிற்கு அசத்தினார். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் அத்தனை சிரமம் எடுத்து அதை நிகழ்த்த கமலால் மட்டுமே முடியும். 


 



கமல் மட்டுமே பத்து கதாபாத்திரங்கள் என்றால் அவருடன் கே.ஆர். விஜயா, நாகேஷ், அசின், எம்.எஸ். பாஸ்கர், பி. வாசு, ரேகா, சந்தானபாரதி, வையாபுரி, ஜெயப்பிரதா மற்றும் பல கதாபாத்திரங்கள். இத்தனை கதாபாத்திரங்கள் என்றாலும் அதை ஒரு கோர்வையாய் திரைக்கதைக்குள் சாமர்த்தியமாக கொண்டு வந்து படத்தை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் காட்சிகளை கனகச்சிதமாக கட்டமைத்து  பார்வையாளர்களை ஸ்வாரஸ்யமாக்கிய பெருமை கே.எஸ். ரவிக்குமாரையே சேரும். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தின் திரைக்கதையோடு அழகாக பொருத்தியது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.  


கமல்ஹாசன் படம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கும் என்றாலும் தசாவதாரம் அவரின் திரை பயணத்தில் ஒரு தங்க கிரீடம்.