கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘பேட்மேன் டார்க் நைட்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் மிகச்சிறந்தப் படமாக பேட்மேன் ஏன் கருதப்படுகிறது?


டிசி காமிக்ஸின் பேட்மேன் கதாபாத்திரம் ஹாலிவுட் வரலாற்றில் இதற்கு முன் வெளியாகிய எக்கச்சக்கமானப் படங்களால் நீர்த்து போய் இருந்தது. மற்ற சூப்பர்ஹீரோக்களைப் போல் பேட்மேனிடம் ‘சூப்பர் பவர்ஸ்’ எதுவும் கிடையாது.


பேட்மேன் தனது பலம் அனைத்தையும் பெறுவது தொழில்நுட்பத்தின் வழியாகத்தான். பேட்மேனை மீண்டும் புதிய ஒரு பரிணாமத்தில் காட்ட வேண்டிய கட்டாயம் உருவானது. அப்படியான நேரத்தில் தான் பேட்மேன் பிரன்சைஸ் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனிடம் ஒப்படைக்கப்படுகிறது.


முதலில் ‘பேட்மேன் பிகின்ஸ்’ படத்தை இயக்கினார் நோலன். இந்தப் படம் பேட்மேன் படங்களின் மீது குறைந்து வந்த ரசிகர்களின் ஈடுபாட்டை மீட்டெடுத்தது! அதே நேரத்தில் இப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய  வெற்றியைப் பெற்றது. ‘பேட்மேன் பிகின்ஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு நோலனிடம் கேட்டுக்கொண்டது வார்னர் ப்ரோஸ் தயாரிப்பு நிறுவனம்.


பேட்மேன் பிகின்ஸ்


ஒரு சூப்பர் ஹீரோ இந்த உலகத்திற்கு ஏன் தேவை? எந்த மாதிரியான சமூகக் காரணிகள் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்குகின்றன?அதே நேரத்தில் விண்ணில் இருந்து வந்த ஒருவராக இல்லாமல் நம்மில் ஒருவராக இருக்கும் ஒருவர் எப்படி சூப்பர் ஹிரோவாக மாற முடியும்? அதை எப்படி எதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக எடுக்க முடியும்? என்பன போன்ற அடிப்படையான கேள்விகளை ‘பேட்மேன் பிகின்ஸ்’ படத்தில் கையாண்டிருப்பார் நோலன்.


இதற்கு முன்பாக இரண்டாம் பாகங்களை இயக்கியிராத நோலன் இந்த புதிய சவாலை தனது கையில் எடுத்துக்கொண்டார்.


ஜோக்கரின் உருவாக்கம்


முதல் பாகத்தின் திரைக்கதை எழுத்தாளரான டேவிட் எஸ்.கோயர் மற்றும் கிறிஸ்டோஃபர் நோலன் மற்றும் அவரது சகோதரரான ஜோனத்தன் நோலன் ஆகிய மூவரும் ஆறு மாத காலம் இணைந்து விவாதித்து ஒரு கதைக்களத்தை உருவாக்கினார்கள். பேட்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய வில்லனான ஜோக்கரின் வளர்ச்சியை கதையாக தீர்மானித்தார்கள். இந்தக் கதையை வார்னர் ப்ரோஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்து ஒப்புதல் பெற்றார் நோலன்.


கேய்ஸி என்கிற சண்டைப் பயிற்சி


பேட்மேனாக  நடித்த கிறிஸ்டியன் பேலை இரண்டாம் பாகத்திற்காக கேய்ஸி என்கிற ஒரு சண்டைப் பயிற்சியை பயில வைத்தார் இயக்குநர் நோலன். படத்தில் சண்டைக் காட்சிகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்தினார் நோலன்.


ஜோக்கராக ஹீத் லெட்ஜர்


‘ப்ரோக்பேக் மெளண்டெயின்’ என்கிற படத்தைப் பார்த்து, அதில் நடித்திருந்த ஹீத் லெட்ஜரை ஜோக்கராக நடிக்கவைக்க முடிவு செய்தார் நோலன். இந்தத் தகவல் இணையதளத்தில் வெளியானதும் எக்கசக்கமான விமர்சனங்கள் ஹீத் லெட்ஜரின் மேல் எழுந்தன! ஆனால் படம் வெளியான பிறகு அவரை விமர்சித்த அனைவரும் அவரைக் கொண்டாடினார்கள்.  இன்றுவரை மிகச் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களின் வரிசையில் இடம்பெறக்கூடியது ஜோக்கர் கதாபாத்திரம் .


முதல் பாகத்தைப்  பேட்மேன் போல் இரண்டாம் பாகத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு ஒரு  தனி அடையாளம் கொடுத்தார் கிறிஸ்டோஃபர் நோலன். 15 ஆண்டுகள் கடந்தும் ஒரு சிறந்த வில்லனை மையப்படுத்தியப் படமாக இருக்கிறது டார்க் நைட் திரைப்படம்!