சமீபத்தில் இந்தியில் வெளியாகி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் 12th ஃபெய்ல். இப்படம் இந்தியா முழுவதும்  விமர்சனரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர், நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், நாளிதழ் ஒன்றில் வெளியான கார்ட்டூனை பதிவிட்டு, ”அரைவேக்காட்டு உருளைக்கிழங்கு மற்றும் அரைவேக்காட்டு தேசியவாதிகள் குடலில் வலியை மட்டுமே ஏற்படுத்துவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கார்ட்டூனில், ”நான் ராவணனால் கடத்தப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உங்கள் பக்தர்களால் அல்ல” என சீதா கூறுவதைப் போன்ற படமும் உள்ளது. 




இந்நிலையில் சமூக வலைதளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட விக்ராந்த் மாஸ்ஸியின் இந்தப் பதிவு தற்போது சர்சையைக் கிளப்ப,  அந்த ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார். இந்தப் பதிவினை கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவாவில் எட்டு வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விக்ராந்த் மாஸ்ஸி பகிர்ந்துள்ளார்.


இந்தப் பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளதால், இது தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ள விக்ராந்த், "இந்து சமூகத்தை காயப்படுத்தவோ, அவமதிக்கவோ அல்லது அவமரியாதை செய்யவோ தான் ஒருபோதும் விரும்பவில்லை" என தன் எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.






மேலும், “2018இல் எனது ட்வீட் ஒன்றின் பின்னணி குறித்து, எனது தரப்பு வாதத்தை வெளிப்படுத்த நினைக்கின்றேன். இந்து சமூகத்தை புண்படுத்துவது, இழிவுபடுத்துவது அல்லது அவமரியாதை செய்வது எனது நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை.


ஒரு நாளிதழில் வெளியான கார்ட்டூனைச் சேர்க்காமல் இதை சொல்லியிருக்கலாம். எல்லா நம்பிக்கைகளையும் மதங்களையும் நான் மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, புண்படுத்தப்பட்ட ஒவ்வொருவரிடமும் நான் மிகவும் தாழ்மையுடன் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நாம் அனைவரும் காலப்போக்கில் வளர்ந்து நமது தவறுகளை நினைத்துப் பார்க்கிறோம். இந்தத் தவறு என்னுடையது” எனத் தெரிவித்துள்ளார்.