எந்திரன் படம் வெளியாகி இன்றுடன் 12 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் ரஜினி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் டைரக்‌ஷனிலும் சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வாயை பிளக்கும் அளவுக்கு அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . கிராபிக்ஸ் காட்சிகளும்,  ஏ.ஆர் ரஹ்மானின் துள்ளல் இசையும், உலக அழகி ஐஸ்வர்யாவின் நடன அசைவுகளும் படத்தின் ப்ளஸ் பாய்ண்ட் என்றே சொல்லலாம். இப்படம் ஹிந்தியில் ரோபோ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.


இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார் என்ற செய்தி அந்த சமயத்தில் வெளியான போது, அனைவரும் இவருக்கு இவர் ஜோடியா என்று கலாய்த்து வந்தனர். சமீபத்தில் பொன்னியின் செல்வன் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில், நடிகர் ரஜினி தளபதி படத்தில் பத்து டேக் எடுத்ததாகவும், மணி ரத்தினத்தை திருப்தி அடைய செய்ய கமலிடம் 
ஆலோசனை கேட்டதாகவும் சிரித்து கொண்டே வெளிப்படையாக பேசினார்.






இதுபோல்தான் வெளிப்படையாக  2010-ல் எந்திரன் படத்தை பற்றிய சில விஷயங்களையும் பேசினார். ரஜினி -ஐஸ்வர்யா காம்போ முதன்முறையாக எந்திரன் படம் மூலம்தான் நிகழ்ந்தது. படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி,  “ பெங்களூருவில் உள்ள என் அண்னன் வீட்டிற்கு போனேன். அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜஸ்தான் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நான் வருவதை அறிந்து, அண்ணன் வீட்டுக்கு வந்தனர். நந்துலால் எனும் 60 வயது நபர், அந்த குடும்பத்தில் ஒருவர். அவருடன் நான் நன்றாக பழகி உள்ளேன். 


அவர் வந்ததும் என்ன உங்களுக்கு முடி கொட்டி விட்டது போல கிண்டலாக கேட்டு விட்டு, ரிடையர்மெண்ட் காலத்தை என்ஜாய் பண்றீங்களா என கேட்டார். அதற்கு நான் “ இல்ல நான் படம் நடித்துக்கொண்டிருக்கிறேன். ரோபோட் எனும் படத்தில் நடிக்கவிருக்கிறேன். ஐஸ்வர்யா ராய்தான் ஹீரோயின் என்றேன். 


ஓ..யார் ஹீரோ என்று கேட்டார், நான் தான் ஹீரோ என்று சொன்னேன். ஆச்சர்யத்தில் திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்டு 
இருந்தார். அவர் மகனும் அவரை அமைதியாக இருக்க சொன்னார். அவரால் இந்த விஷயத்தை  ஜீரணிக்க முடியவில்லை போல. நானும் அங்கு இருந்து கிளம்பி வீட்டேன். அப்போது கூட ஷாக்கில் இருந்து மீளாத அவர், அட ஐஸ்வர்யாவிற்கு என்ன ஆச்சு இந்த அமிதாப் பச்சனுக்குதான் என்னவாச்சு என கேள்வி கொண்டிருந்தார். 


இந்த கதையெல்லாம் சொன்ன பின், நன்றி ஐஸ்வர்யா ஜி என்றார். ரஜினி பேசி முடிந்தவுடன், அரங்கத்தில் உள்ள மக்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயல்பாகவே இருப்பவர் என ரஜினி மீண்டும் நிரூபித்துவிட்டார் என்றே சொல்லலாம்