தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 43 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 60 வார்டுகளிலும் போட்டியிட்ட அதிமுக 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் சுயேச்சையாக வெற்றி பெற்ற 4 பேரில் 3 பேர் திமுகவில் இணைந்து விட்டனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக அபார வெற்றி பெற்று தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவி அமைச்சர் கீதாஜீவனின் தம்பி ஜெகனுக்கு என உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது துணை மேயர் பதவி யாருக்கு என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தினருக்கு அடுத்தபடியாக மீனவ சமுதாய மக்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இதுவரை தூத்துக்குடி துணை மேயர் பதவி மீனவ சமுதயாத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த முறையும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினருக்குதான் துணை மேயர் பதவி என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், துணைமேயராக ஆண் பொறுப்பேற்பாரா அல்லது பெண்ணுக்கா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி மாநில மகளிரணி செயலாளராக உள்ளார். மகளிரணி துணை செயலாளராக அமைச்சர் கீதாஜீவனிடம் அந்த வகையில், துணை மேயர் பதவியை பெண்ணுக்கு ஒதுக்க வேண்டும் என்ற குரலும் தூத்துக்குடி தி.மு.க மகளிரணியில் ஓங்கி ஒலிக்கிறது. 40 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெனிட்டா துணை மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள ஜெனிட்டா திமுக வடக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் செல்வராஜின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், ஜெகனின் ஆதரவாளரான 7வது வார்டில் வெற்றி பெற்ற திரேஸ்புரம் பகுதிச் செயலாளரான நிர்மல்ராஜூம் துணைமேயருக்கான ரேஸில் உள்ளார். இவரது தந்தை தொம்மை ஏசுவடியான், ஏற்கெனவே துணை மேயராக பதவியில் இருந்தவர். துணை மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டால், ஜெனிட்டாவுக்குதான் அதிக வாய்ப்பு என்கின்றனர் திமுகவினர். துணை மேயர் பதவிக்கு இப்படி என்றால் மண்டலத்தை பிடிக்க மல்லுக்கட்டுகின்றனர் வார்டுகளை கைப்பற்றிய திமுக உடன்பிறப்புகள்.