மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். 


பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி:


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. குறிப்பாக அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக நேரடியாக 33 வேட்பாளர்களை களம் இறங்குகிறது. குறிப்பாக திமுகவுடன் நேருக்கு நேர் 18 தொகுதிகளில் போட்டிருக்கிறது.


இதன் காரணமாக இந்த நாடாளுமன்ற தேர்தல் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் திருச்சியில் இன்று மாலை தேர்தல் பிரச்சார அறிமுக கூட்டம் மூலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 40 வேட்பாளர்களையும் ஆதரித்து  தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.


திரளான வரவேற்பு:


இதற்கு முன்னதாக சேலம் பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அதிமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விக்னேஷ் ஆதரித்து சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


சென்றாய பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள வந்த அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமிக்கு கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக கோவிலுக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி உற்சாகமான முறையில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையின் போது  அதிமுக சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விக்னேஷ் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றார். 


சாமி தரிசனம்:


கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது சென்றாய பெருமாள் திருக்கோவில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் வெற்றி பெற்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில்  பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன்பாக சென்றாய பெருமாள் திருக்கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


குறிப்பாக தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பும், முக்கிய பொறுப்பேற்கும் போதும் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கமாக கொண்டுள்ளார். நெடுஞ்சாலை துறை அமைச்சர், முதலமைச்சரானபோதும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் என அனைத்து முக்கிய பதவிகளில் அமரும் போது இந்த கோவிலில் நேரில் வந்து சென்றாய பெருமாள் திருக்கோவில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டார்.


இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்றாய் பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை நேரில் வந்து நடத்தி வைத்தார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட பிரச்சாரம் மற்றும் இறுதி கட்ட பிரச்சாரத்தை இக்கோவிலில் இருந்து தான் துவங்கி மேற்கொண்டார். இறுதியாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தான் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.