தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியானது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுகவிற்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கி தமிழகம் முழுவதும் தனி அணியாக போட்டி போடவுள்ளார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியை குறிவைத்துள்ளார். இதற்கான பணிகளை தவெகவினர் தொடங்கியுள்ளனர். இதனால், வழக்கமான ஒரு தொகுதியாக இருந்த பெரம்பூர், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலின் 'விஐபி ஸ்டார்' தொகுதியாக உருமாறியுள்ளது.
ஒருபுறம் திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்யின் 'மாஸ்', மறுபுறம் இது தங்களது அசைக்க முடியாத கோட்டை என மார்தட்டும் ஆளுங்கட்சியான திமுக. இந்த இரண்டு பெரும் சக்திகளையும் பெரம்பூரில் எப்படி எதிர்கொள்வது என அதிமுக வகுத்துள்ள வியூகமும், களமிறக்கத் திட்டமிட்டுள்ள வேட்பாளரும் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெரம்பூரை தவெக குறிவைக்கக் காரணம் என்ன?
ஐ.சி.எஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைந்துள்ள பெரம்பூர், உழைக்கும் வர்க்கத்தினரும், நடுத்தர மக்களும் அதிகம் வசிக்கும் பகுதியாகும். சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களும், கிறிஸ்தவ சிறுபான்மையினரும் கணிசமாக உள்ளனர். வன்னியர், உடையார், தேவர், யாதவர், முதலியார் என பல சமூகத்தினரும் இங்கு வசித்து வருகிறார்கள்.
தவெக தொடங்கிய குறுகிய காலத்திலேயே வேறு எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் பெரம்பூர் தொகுதியில் மட்டும் சுமார் 40ஆயிரம் பேரை இணைத்துள்ளதாக அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். எனவே வடசென்னையின் முக்கியப் பகுதியான இங்கு நமது தலைவர் போட்டியிட வேண்டும்” எனவும் ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார்.
திமுகவின் பலம் - ஆர்.டி. சேகர்
கடந்த 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, பெரம்பூரைத் தக்க வைத்துள்ள திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ ஆர்.டி. சேகர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் இவர், 2026 தேர்தலிலும் மீண்டும் களம் காண வாய்ப்பு கேட்டு வருகிறார். பணபலம், அதிகார பலம் மற்றும் கட்சியின் கட்டமைப்பு ஆகியவை இவருக்கு மிகப்பெரிய பலம்.
அதிமுகவின் 'மாஸ்டர் பிளான்' - எம்.ஏ. சேவியர்!
பெரம்பூர் தொகுதியை ஆரம்பத்தில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால், விஜய் களமிறங்க வாய்ப்புள்ளதாலும், திமுகவின் பணபலத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாலும், நேரடியாக இரட்டை இலைச் சின்னத்திலேயே வலுவான வேட்பாளரை நிறுத்த அதிமுக மேலிடம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், தொகுதி மக்களிடையே நன்மதிப்பையும், எந்தப் பின்புலமும் இல்லாமல் சாமானியர்களின் ஆதரவையும் பெற்ற உடையார் சமூகத்தைச் சேர்ந்த எம்.ஏ. சேவியர் என்பவரை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுகவின் கோட்டையைத் தகர்க்கவும், விஜய்யின் வருகையைச் சமாளிக்கவும் சேவியர் சிறந்த தேர்வாக இருப்பார் என அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. அதற்கான முக்கியக் காரணங்கள் கடந்த 25 ஆண்டுகளாக பெரம்பூர் பகுதியில் எந்தவித அரசியல் லாப நோக்கமுமின்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருபவர் சேவியர். தொகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம்.
யார் இந்த சேவியர்.?
பெரம்பூரில் 'அன்னை டிஜிட்டல்' என்ற பேனர் கடையை நடத்தி வரும் இவர், கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சித் தொண்டர்களுடனும் நட்புடன் பழகக் கூடியவர். அதிமுகவுக்குள் கோஷ்டி பூசல் ஏதுமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக வலம் வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பெரம்பூரில் இலவச கம்ப்யூட்டர் சென்டரை வெற்றிகரமாக நடத்தியவர். இதனால், தொகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இவருக்குத் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு.
சிறுபான்மையினரின் வாக்கு வங்கி
பெரம்பூர் தொகுதியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் உள்ளனர். ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவரான சேவியருக்கு, பெரம்பூரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த மக்களிடையேயும், மத போதகர்களிடையேயும் மிகப்பெரிய நன்மதிப்பு உள்ளது. இவரை நிறுத்தினால், வழக்கமாக திமுகவுக்குச் செல்லும் சிறுபான்மையினர் வாக்குகள் பெருமளவு அதிமுக பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேவியரின் அரசியல் பின்னணி
சரத்குமாரின் ரசிகராக இருந்த சேவியர், பின்னர் சமத்துவ மக்கள் கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்தார். 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்ததை ஏற்காமல், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது பெரும் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். ஆளும் திமுக அரசுக்கு எதிரான பல போராட்டங்களில் முன்னின்று களப்பணியாற்றியுள்ளார்.
கடும் போட்டியை உருவாக்கும் பெரம்பூர்
விஜய்யின் நட்சத்திர பலம், ஆர்.டி. சேகரின் ஆளுங்கட்சி பலம் ஆகியவற்றை பெரம்பூர் சந்திக்கத் தயாராகி வருகிறது. ஆனால், எந்தவிதப் பந்தாவும் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக மக்களுடன் மக்களாக வாழ்ந்து வரும் எம்.ஏ. சேவியரை அதிமுக களமிறக்கினால், மதம் மற்றும் அரசியல் கடந்து அனைத்துத் தரப்பு மக்களின் வாக்குகளையும் அறுவடை செய்ய முடியும் என்று அதிமுக தலைமை நம்புகிறது .
அரசியல் பலம் கட்சி பலம் பண பலம் கொண்ட ஆர்டி சேகரும், அதிமுக வாக்கு வங்கி .கிரவுண்ட் ஒர்க் அரசியல் தெரிந்த அதிமுக சேவியரும் பவர் ஸ்டார் கொண்ட விஜய்யும் களத்தில் நிற்கும் போது பெரம்பூர் தொகுதி களத்தில் மூன்று பேருக்கும் மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
