தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளரை இன்று பாட்டாளி மக்கள் கட்சிகள் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.


யார் அந்த அண்ணாதுரை:


அதன்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அண்ணாதுரை போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். பாமக வேட்பாளர் அண்ணாதுரை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியது முதல் அக்கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர், சேலம் மாவட்ட தொண்டர் அணி செயலாளர், சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர், சேலம் மாவட்ட செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸிற்கு மிகவும் நெருக்கமானவர் அண்ணாத்துரை. பாமக சார்பில் நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் முன் நின்று வழிநடத்தபவர் என்பதால் இவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டி:


கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் தற்போதைய பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி எதிர்த்து அண்ணாதுரை போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் 57,650 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்த அண்ணாதுரை தற்போது மீண்டும் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.