ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக் குமார் போட்டியிடும் நிலையில், தனது சொத்து மதிப்பு ரூ.583 கோடி என்று தெரிவித்துள்ளார். யார் இந்த ஆற்றல் அசோக் குமார்? அது என்ன ஆற்றல்? பார்க்கலாம்.


மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகின்றது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டமாகத் தொடங்கும் தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகக் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கின்றன. இதற்கிடையே ஈரோடு தொகுதியில் அதிமுக கட்சி சார்பாக மக்களவைத் தேர்தல் வேட்பாளராக ஆற்றல் அசோக் குமார் போட்டியிடுகிறார்.


யார் இவர்?


கடந்த 2021-ல் இருந்து பாஜக ஓபிசி அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அசோக்குமார், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்து 4 மாதங்களிலேயே அவருக்கு எம்.பி. சீட் வழங்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். தாய், தந்தை பேராசிரியர்கள். (பின்னாளில் தாய் செளந்தரம் ஈரோடு எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.) அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அவர், கோவையில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்காவில் முதுநிலை பொறியியல் படித்தவர், அங்கேயே மைக்ரோசாஃப்ட், இண்டெல், ஜெராக்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றினார்.


தனது பெற்றோரைப் போல கல்வியாளராக விரும்பி, தாய்நாடு திரும்பிய அசோக் குமார், தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் (The Indian Public School - TIPS) பள்ளி, கல்லூரி குழுமங்களைத் தொடங்கினார். ஆற்றல் எனும் பெயரில் அறக்கட்டளைத் தொடங்கிய அசோக்குமார், கல்வி நிறுவனங்களையும் விரிவுபடுத்தினார்.


டிப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்,  தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவரின் மாமியார் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.ஆர்.சரஸ்வதி ஆவார். ஈரோட்டில் புகழ்பெற்ற சி.கே.மருத்துவனைக்குச் சொந்தக்காரர். 




சமூக சேவை


சமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட ஆற்றல் அசோக் குமார், ஆற்றல் உணவகம் என்ற பெயரில் ரூ.10-க்கு மலிவு விலை உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் ஈரோடு, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அதேபோல ஆற்றல் மருத்துவமனை என்ற பெயரில்ரூ.10-க்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. இங்கு குறிப்பிட்ட மருந்துகள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல 90-க்கும் மேற்பட்ட கிராமப்புற அரசுப் பள்ளிகளையும் சீரமைத்து உள்ளதாகவும் அசோக் குமார் தெரிவித்துள்ளார். 


சொத்து மதிப்பு எவ்வளவு?


ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9500 ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன. இதில், வங்கிக் கணக்குகளில் ரூ.6.99 கோடி, 10.01 கிலோ நகை, கையிருப்பு ரூ.10 லட்சம் ஆகியவை உள்ளன. இத்துடன் குடும்ப சொத்து மற்றும் தனது சுய சம்பாத்திய சொத்து என மொத்தம் ரூ 56.95 கோடி அசையா சொத்துகளும் அசோக் குமார் வசம் உள்ளன. இதன்படி வேட்பாளர் அசோக்குமாருக்கு மொத்தமாக ரூ.582.95 கோடி சொத்து உள்ளது.


அதேநேரம், தனக்கு சொந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்று தெரிவித்துள்ள அசோக்குமார், ரூ.12 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.