போரால் இந்தியாவில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்படுவதாக வாட்ஸப், சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி வைரலான நிலையில், உண்மையில் நடந்தது என்ன? கீழே பார்க்கலாம். 

இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்காத வகையில், ஈரானிய அதிகாரிகளின் திட்டமிட்ட படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, 18 அமெரிக்க நிறுவனங்களை தாக்கி அழிப்போம் என்று ஈரான் புரட்சிகர பாதுகாப்புப்படை அறிவித்துள்ளது. இன்று டெஹ்ரான் நேரப்படி இரவு 8.00 மணி முதல் தாக்குதல் நடப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு

இந்த நிலையில் இன்று திடீரென வணிக சிலிண்டருக்கான விலை உயர்ந்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், போர் நிலவரத்துக்கு மத்தியில் விலை உயர்த்தப்பட்டது.

போர்ச் சூழல் குறித்து இன்று (ஏப்ரல் 1) இரவு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார்.

லாக் டவுன் எனப்படும் ஊரடங்கு அமல்

இதற்கு மத்தியில் போர் காரணமாக லாக் டவுன் எனப்படும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகின. எனினும் இந்த செய்திகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இந்த நிலையில் போர் லாக் டவுன் அமல்படுத்தப்படுவதாக வாட்ஸ்ப்பில் ஓர் ஆவணம் வெளியானது. இதைத் திறந்து பார்த்தால், ஏப்ரல் ஃபூல் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த எல்லோரும், ’’யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்ற எண்ணத்தில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

இதனால் இதுதொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.