TN Election 2026 Exit Poll: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முக்கியமான வாக்காளர் பிரிவுகளில் இளைஞர்களிடையே மட்டுமே பெரிய அளவிலான வரவேற்பை விஜய் பெற்றுள்ளாராம்.

தவெகவிற்கான வாக்கு சதவிகித கணிப்புகள்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், மேற்குவங்கத்தில் இரண்டாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவுற்றது. அதனை தொடர்ந்து ஐந்து மாநிலங்களுக்கான  தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக வோட் வைப் எனும் நிறுவனம், தமிழக அரசியல் கட்சிகள் எந்தெந்த முக்கியமான வாக்காளர்கள் பிரிவில் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெறக்கூடும் என உத்தேசமாக கணக்கிட்டுள்ளது. அதில், விஜய் தலைமையிலான தவெக இளைஞர்கள், பெண்கள் மற்றும் கிறிஸ்துவ மக்களிடையே நல்ல ஆதவவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பல முக்கியமான பிரிவுகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

15.8% வாக்குகளை பெறும் விஜய்..

வோட் வைப் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, விஜய் இந்த சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக சுமார் 15.8 சதவிகித வாய்ப்புகளை பெறக்கூடுமாம். அதேநேரம், திமுக கூட்டணி சுமார் 38.9 சதவிகித வாக்குகளையும், அதிமுக கூட்டணி சுமார் 39.9 சதவிகித வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 3.5 சதவிகித வாக்குகளையும், மற்றவை 1.8 சதவிகித வாக்குகளையும் பெறுமாம். 

வயது பிரிவுகளில் விஜயின் தாக்கம் எப்படி?

ஒட்டுமொத்த வாக்கு சதவிகிதத்தில் ஆண்கள் பிரிவில் 13.5 சதவிகித வாக்குகளையும், பெண்கள் பிரிவில் 18.1 சதவிகித வாக்குகளையும் விஜய் பெறக்கூடுமாம். 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே சுமார் 25.1 சதவிகித வாக்குகளை அறுவடை செய்து ஆச்சரியம் அளிப்பாராம். அதேநேரம், 35 முதல் 44 வயதுக்குட்பட்ட நபர்களிடையே 13.8 சதவிகித வாக்குகளையும், 55 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடையே வெறும் 7.7 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறுவாராம்.  

விஜய்க்கான சமூக வாக்குகள் எப்படி?

பட்டியலின மக்களிடையே 16.5 சதவிகித வாக்குகளையும், பழங்குடியின மக்களிடையே 15.7 சதவிகித வாக்குகளையும், ஒபிசி பிரிவில் 14.6 சதவிகித வாக்குகளையும் விஜயின் தவெக பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையிலான பிரிவில் இந்துக்களிடம் இருந்து 19.8 சதவிகித வாக்குகளையும், இஸ்லாமிய மக்களிடமிருந்து 13.8 சதவிகித வாக்குகளும், கிறித்துவ மதத்திலிருந்து 23.5 சதவிகித வாக்குகளையும் விஜய் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. 

மண்டலங்கள் அடிப்படையில் விஜயின் கோட்டை?

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பிராந்தியங்களில் மட்டுமே அதிகபட்சமாக 21.1 சதவிகித வாக்குகளை விஜய் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. இதுபோக வடக்கு மண்டலத்தில் 15 சதவிகிதமும், டெல்டா மண்டலத்தில் 13.9 சதவிகிதமும், தெற்கு மண்டலத்தில் 16.7 சதவிகிதமும், மேற்கு மண்டலத்தில் 14.6 சதவிகிதமும் விஜய் வாக்குகளை பெறுவார் என கூறப்படுகிறது. அமைவிடங்கள் அடிப்படையில் நகரங்களில் 18.5 சதவிகித வாக்குகளையும், கிராமங்களில் 13.2 சதவிகித வாக்குகளையும் தவெக தலைவர் விஜய் பெறுவார் என வோட் வைப் நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.