Virugambakkam Election Result 2026: விஜயின் நீண்ட நாள் ஓட்டுனரின் மகனான சபரிநாதன், விருகம்பாக்கம் தொகுதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகான வாக்குகளை பெற்றுள்ளார்.

தவெக முன்னிலை: 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக தனித்து போட்டியிட்ட, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது. அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் முன்னிலை வகித்து வருகிறார். இதுபோக வேட்பாளர்களின் முகம் மற்றும் பெயர் கூட தெரியாத நிலையிலும், 90-க்கும் அதிகமான தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். பரப்புரையின் போது விஜய் சொன்னபடியே, 234 தொகுதிகளிலும் விஜயே போட்டியிடுகிறார் என்ற நிலையிலேயே வாக்காளர்கள் வாக்களித்து இருப்பதை உணர முடிகிறது. அந்த வகையில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் விஜயின் நீண்டநாள் ஓட்டுனரின் மகனான சபரிநாதன் முன்னிலை பெற்றுள்ளார்.

விருகம்பாக்கத்தில் தவெகவின் அதிரடி

விருகம்பாக்கம் தொகுதியில் 4 சுற்றுகளின் முடிவில் தவெக வேட்பாளர் சபரிநாதன் 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். அவருக்கு எதிராக திமுக சார்பில் களமிறங்கிய பிரபாகர ராஜ 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக சார்பில் களமிறங்கிய வி.என். ரவி சுமார் 7 ஆயிரம் வாக்குகளை பிடித்துள்ளார்.  நாம் தமிழர் கட்சியின் சந்தோஷ் வெறும் 999 வாக்குகளையே பெற்று நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.

யார் இந்த சபரிநாதன்?

விஜய்யின் நம்பிக்கைக்குரிய ஓட்டுநராக சுமார் 30-40 ஆண்டுகள் பணியாற்றியவர் ராஜேந்திரன். இவரது மகனான சபரிநாதனை விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்தார். அப்போது விஜயுடன் புகைப்படம் எடுக்கையில் கண்கலங்கிய சபரிநாதன், விஜயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அதனை உடனடியாக தடுத்து நிறுத்திய விஜய், கண்கலங்கி அழுத சபரிநாதனை கட்டி அணைத்து வாழ்த்து கூறினார். இது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி பெருக்கான சூழலை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை, விசுவாசத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. அதன் நீட்சியாக விஜயின் நம்பிக்கையை வெற்றியடையச் செய்யும் வகையில், விருகம்பாக்கம் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

சபரிநாதன் மீதான விமர்சனங்கள்:

முன்னதாக,  விஜய் நடத்தி வரும் 'ஜெயா நகர் ப்ராபர்டி லிமிடெட்' எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர்தான் கார் ஓட்டுநர் ராஜேந்திரன். அவரது மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியது. விஜய் நடத்தும் நிறுவனத்திற்கு எதற்காக அவரது கார் ஒட்டுநர் இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும்? ஒருவேளை விஜய் தனது வருமானத்தை மறைக்க முயற்சிக்கிறாரோ? ராஜேந்திரன் செய்யும் உதவிக்கு பிரதிபலனாகவே சபரிநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா? என்ற பல கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கி சபரிநாதன் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.