TVK Promises: முதல்வராகும் விஜய்; தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள்?
தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள் என்று விரிவாகக் காணலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள் அறிவிக்கப்பட்டன என்று விரிவாகக் காணலாம்.
தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
தொழில் கல்வி, மருத்துவம், சட்டம், நிர்வாகவியல் பயிலும் ஆதி திராவிடர் - பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
பட்டியலினத் தொழில்முனைவோர் திட்டம் மூலம் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு முதலீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
தாட்கோ கடன் தள்ளுபடி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வீடு மற்றும் பட்டா வழங்கப்படும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 100% பயிர் காப்பீடு உறுதி செய்யப்படும். சாகுபடியாளர் உரிம அட்டை மூலம், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹10,000 நேரடி முதலீட்டு உதவி வழங்கப்படும்.
சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் (ஜூலை - ஆகஸ்ட் பருவம், ஜனவரி-பிப்ரவரி பருவம்) வழங்கப்படும்.
பயிர்க் கடன் தள்ளுபடி
5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி அளிக்கப்படும்.
செயற்கை உர விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் இணையும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர்கல்வி வழங்கப்படும்.
விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களில், 2 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார்/காப்பாளர் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் வரவு வைக்கப்படும்.
பள்ளிப்படிப்பை முடித்து அரசு கல்லூரியில் இணையும் ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவருக்கும் கல்லூரிச் சேர்க்கை செலவுகளால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைக்கும்வகையில் 8,000 ரூபாய் வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் பயின்று பின்னர் அரசுக் கல்லூரிகளில் இணைந்து பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கும் கல்லூரிக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
மாத உதவித்தொகை 3 ஆயிரம் ரூபாய்
வறுமையில் வாடும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாத உதவித்தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
கர்ப்பிணிப் பெண்கள், அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வாங்குவதற்கும், மாதாந்திர மருத்துவப் பரிசோதனை செய்வது மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உதவும் வகையில் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகள் முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பதிவு செய்ததில் இருந்து முதல் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

மாதம் 10 ஆயிரம் உதவித்தொகை
இளைஞர்கள் திறனை மேம்படுத்தும்வகையில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் இளைஞர்கள் இந்த முயற்சியினால் பயன்பெறுவது உறுதி செய்யப்படும். இந்தப் பயிற்சிக் காலத்தில், பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும், தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு மாதம் 8000 ரூபாயும் வழங்கப்படும்.
ரூ. 25 லட்சம் இன்ஷூரன்ஸ்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ‘மக்கள் நலன் காப்பீடு' அட்டை வழங்கப்படும். கேன்சர், இதய அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ரோபோடிக் அறுவை சிகிச்சை உட்பட அனைத்து விதமான மருத்துவ சேவைகளுக்கும் இந்த காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம்.
தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
பாரம்பரிய மெக்கானிக்குகள் EV மெக்கானிக்குகளாக மாறுவதற்கு பயிற்சி பெற உதவும் வகையில், 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
த.வெ.க. அரசு சோலார் மின்சாரத்திற்கு மாறுபவர்களுக்கு 1kW-க்கு ரூ. 35,000, 2kW-க்கு ரூ.70,000, 3kW+க்கு ரூ.1 லட்சம் என்ற வீதத்தில் மானியம் வழங்கும் என்று தமிழக வெற்றிக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















