திருப்பத்தூர்: “திமுகவிற்கு இந்தத் தேர்தலில் சரியான பாடத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புகட்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேல்முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் ஆசிரியர் நகர் பகுதியில் கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 170 தொகுதிகளில் கேமரா சின்னத்தில் போட்டியிடுகிறது. மேலும், கூட்டணி கட்சிகள் அவரவர் சின்னங்களில் போட்டியிடுகின்றன. மொத்தம் 234 தொகுதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 30 தொகுதிகளில் எந்தவித காரணமும் இன்றி, தகுதியுள்ள வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்திற்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையாகும்,” என்றார்.
மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
அதிகாரிகள் சார்பில் சில இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், “இது ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் செய்யும் சதி. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் இதுபோன்ற முறையில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது இதுவே முதல் முறை,” என தெரிவித்தார்.
மேலும், “தமிழக வாழ்வுரிமைக் கட்சி ‘டிவிகே’ என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. எங்கள் கட்சி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊடகங்களிலும் ‘டிவிகே வேல்முருகன்’ என வெளியிடப்பட்டு வருகிறது. எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என்று கூறுவதற்கு அவர்கள் யார்?” என கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு ‘டிவிகே’ என்ற குறியீட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கே வழங்க வேண்டும். இதுகுறித்து நடிகர் விஜய்க்கும் தெரியும். இருந்தும் எங்கள் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கூறியிருப்பது வெட்கக்கேடானது,” என்று வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
