வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னத்தை ஒதுக்கி, மாவட்டத் தேர்தல் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புபோர் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது.


அடுத்த நாளான 28ஆம் தேதியன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றன. பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் பல முக்கிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சில நூறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.


சின்னங்கள் ஒதுக்கீடு


நேற்று (மார்ச் 29) புனித வெள்ளி, பொது விடுமுறை என்பதால் மனுக்கள் வாபஸ் தொடர்பான பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணைய அறிக்கையின்படி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று முடிந்த நிலையில், தொகுதிவாரியாக இறுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத அரசியல் கட்சிகளான விசிக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளன.


பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு


இந்த நிலையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து 31 பேர் போட்டியிட உள்ளனர்.


முக்கியக் கட்சி வேட்பாளர்கள் யார் யார்?


வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகனும் சிட்டிங் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் களம் காண்கிறார். அதிமுக சார்பில் பசுபதி என்பவர் போட்டி இடுகிறார். பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட உள்ளார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்.


ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து, அதே பெயரைக் கொண்ட 8 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அவர்கள் அத்தனை பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. மொத்த வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 50 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமிருந்த 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 


முன்னதாக மன்சூர் அலிகான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், சீட் கேட்டு கிடைக்காததால் தற்போது சுயேச்சையாகப் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.