அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. தமிழக சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் டெல்லி தலைமையிடம் வெளியிட்டது. இதில், கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். 


பின்னடைவா?


இந்த நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழக சட்டசபைக்குள் இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க. செல்லும். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் திரைப் பிரபலம், மக்களுக்கு அதிகம் பரிச்சயமானவர் என்பது எனக்கு எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தாது. பிரபலங்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்றால் தேர்தலில் திரை நட்சத்திரங்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும். கடந்த 5 வருடமாக மக்களின் துயரத்தில் தோள் கொடுப்பவராக இருந்திருக்கிறேன். 


காரணம் யார்?


எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவதற்கு பா.ஜ.க.தான் காரணம் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் உண்மையில்லை. கட்சியில் இருந்து விலகுபவர்கள் எந்த கட்சியில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதன் காரணமாகவே பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க., ச.ம.க. போன்ற கட்சிகள் விலகியதால் கூட்டணியின் பலம் குறையாது.அதேபோல, ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்திருப்பதும் அ.தி.மு.க.வுக்கே பலம் சேர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.