கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இன்று தனது வேட்பு மனுவை முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையுடன்  தாக்கல் செய்தார்.

Continues below advertisement

பிரம்மாண்ட ஊர்வலம் மற்றும் தொண்டர்களின் எழுச்சி

வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்னதாக, வடவள்ளி லாலி ரோடு பகுதியில் தொடங்கிய பிரம்மாண்ட ஊர்வலம், வேளாண் பல்கலைக்கழகப் பகுதி வரை நீடித்தது. மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து வானதி சீனிவாசனுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். தொண்டர்களின் உற்சாகமான முழக்கங்களால் வடவள்ளி பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

உடன் இருந்த அண்ணாமலை

இந்த நிகழ்வில், பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான பஜன் லால் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. தமிழக அரசியலில் தீவிரமான களப்பணியாற்றி வரும் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்த ஊர்வலத்தில் நேரில் பங்கேற்று வானதி சீனிவாசனுடன் இணைந்து சென்றது தொண்டர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

Continues below advertisement

வேட்பு மனுச் சமர்ப்பிப்பு

ஊர்வலத்தின் முடிவில், தடாகம் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம், வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தார். மனுத்தாக்கல் செய்தபின், தனது வெற்றி உறுதி எனவும், தொகுதியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் எனவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கூட்டணி ஒற்றுமை மற்றும் அரசியல் முக்கியத்துவம்

இந்த நிகழ்வில் அ.தி.மு.க சார்பில் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கூட்டணிக் கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர். தேர்தல் களத்தில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடையேயான கூட்டணி ஒற்றுமையை இந்த நிகழ்வு பறைசாற்றும் விதமாக அமைந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சமீபகாலமாக தமிழக பாஜகவில் முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் ஆகிய இருவருக்கும் இடையே ஒரு 'நிழல் யுத்தம்' நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் தொகுதியில் செல்வாக்கு செலுத்துவதில் இருவருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அண்ணாமலை மற்றும் வானதி இருவரும் ஒன்றாக வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தது, இருவரும் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.