நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.  மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள் தி.மு.க., 67 வார்டுகள் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 இடத்திலும்,  வி.சி.க ஒரு இடத்திலும், சி.பி.எம் 4 இடத்திலும், ம.தி.மு.க 3 இடத்திலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதே போல் அ.தி.மு.க 15 இடத்திலும், பா.ஜ.க  ஒரு இடத்திலும், சுயேட்சை 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இளம் வேட்பாளர்கள் அதிகளவு தேர்தல் களம் கண்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இளம் வார்டு கவுன்சிலர்களின் செயல்பாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு அளித்துவருகின்றனர். சில இளம் வார்டு கவுன்சிலர்களிடம் பேசினோம்.





சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 வயதே ஆன எம்.பி.ஏ மாணவி பிரியங்காவிடம் பேசினோம்..,”  முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தபோது புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியது. இளைஞர்கள் அரசியலுக்கு வர முன்வரவேண்டும். நான் வெற்றி பெற்ற பின் என்னுடைய வார்டுபகுதி மக்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் கூட என்னை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.  என் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பேன்” என்றார்.




மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 19-வது வார்டில் தி.மு.க கவுன்சிலராக  தேர்வு செய்யப்பட்ட 22 வயது  பி.பி.ஏ படித்த இளைஞரான ரிஷி...” தி.மு.க தலைமை  வாய்ப்பு அளித்துள்ளது. இதனை நன்கு பயன்படுத்தி மக்கள் பணி செய்வேன்.  எனது வார்டு மக்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளர். சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துதல், கால்வாய்களை சுத்தம் செய்தல், முகதியார் புரத்தில் உள்ள கால்வாய் சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஒரு வார்டு கவுன்சிலராக என்ன செய்ய முடியுமோ அனைத்து வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்பேன். என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்” என்றார்.