‛திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக கால் வைக்க முடியாது என பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதாக,’ பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். உண்மையில் ராகுல் அவ்வாறு பேசினாரா? 


2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசித்தார். அதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதோ அந்த பேச்சு...




“ 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. நீட் தேர்வை விலக்க தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் தமிழ்நாடு மனம் தளராமல் அந்த கோரிக்கையை வைத்துக்கொண்டே இருக்கிறது. தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது.


நாட்டின் அடிதளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.” என்று பேசினார். 


இந்நிலையில் தான், இன்று கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் பிரசாரம் செய்த திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு புதிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதோ அவரது பேச்சு...




‛‛ஆட்சி அமைத்த 8 மாதத்தில் 9 கோடி கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டுள்ளோம், அதனால் தான் 3வது அலையை அபாயமின்றி கடந்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். ஒமைக்ரானை எளிதாக வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், ஸ்டாலின் ஆட்சி தான். ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் களத்தில் இறங்கி வேலை பார்த்ததால் தான், அது சாத்தியமானது. 


அதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை கிட்டத்தட்ட 50 சதவீதத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த உரிமையில் தான் மக்களிடம் சென்று உதயசூரியனுக்கும், திமுகவிற்கும் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறேன். மகளிருக்கு இலவச பஸ் பயணம் தருவாக கூறினார், செய்தாரா இல்லையா? கொரோனா நிவாரணத் தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார், அதையும் 2 தவணையாக கொடுத்துவிட்டோம். ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறினார், செய்தார். பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறி, முதற்கட்டமாக செய்து முடித்தார்.  இப்படி சொல்லியதை எல்லாம் செய்திருக்கிறோம். இப்படிப்பட்ட நல்லாட்சிக்கு மக்களிடத்தில் நல்ல பெயர் உள்ளது. இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் நல்லாட்சி நடக்கிறது. வடஇந்தியாவில் இருந்து வரும் பத்திரிக்கையில் சர்வேயில், தமிழ்நாடு முதல்வர் தான் முதன்மையானவராக இருப்பதாக கூறியுள்ளனர்.


பாராளுமன்றத்தில் மோடியை பார்த்து பேசிய ராகுல்காந்தி, ‛திமுக இருக்கும் வரை நீங்கள் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது... தலைவெச்சு படுக்க முடியாது..’ என்று பேசியுள்ளார்,’’ என்று அந்த பிரச்சாரத்தில் உதயநிதி பேசியுள்ளார். 


ஆனால், ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் திமுகவை குறிப்பிட்ட எந்த விமர்சனத்தையும் அவர் முன்வைக்கவில்லை. மாறாக, தமிழர்களையும்-பாஜகவையும் குறிப்பிட்டு தான் பேசியிருந்தார். ஆனால், உதயநிதி பேச்சில், ‛திமுக இருக்கும் வரை’ என்று குறிப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதோ உதயநிதி பேசிய அந்த வீடியோ...






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண