TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay Campaign: இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ பேருக்கு ஓட்டு போட்டீர்கள். 2026 தேர்தல் ஒரு அதிசயத் தேர்தல். இந்த முறை உங்கள் வீட்டில் இருப்பவருக்கு ஓட்டு போடுங்கள்- விஜய்.

உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான் உள்ளது. சில பல கோடிகளைக் கொடுத்து, முதல்வர் ஸ்டாலின் தமிழக காங்கிரஸைக் கையில் போட்டுக் கொண்டார் என்று தவெக விஜய் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கேடிசி நகரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:
’’திமுக கூட்டணி வலிமையாக இல்லை. திமுக அடுத்ததாக ஆட்சி வரமுடியாத சூழலை மக்கள் உருவாக்கி விட்டார்கள். கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து திமுக கல்லாப்பெட்டி கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால் அங்கு கூட்டணிக் கட்சியினரே ஒருவருக்கொருவர் ஓட்டுக் கூட போட முடியாத சூழல் உள்ளது. அதேநிலை பாஜகவிலும் உள்ளது. அதனால் திமுக, பாஜகவுக்கு நம் மீது கோபம் உள்ளது.
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான் உள்ளது. சில பல கோடிகளைக் கொடுத்து, முதல்வர் ஸ்டாலின் தமிழக காங்கிரஸைக் கையில் போட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பிறகுதான்
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நான் போன பிறகுதான், கட்சியையே ஆரம்பித்தேன். சிறுபான்மையின மக்களும் என் பக்கம் நிற்கின்றனர். மதச்சார்பற்ற கட்சி தவெக என்று மக்களும் சிறுபான்மையினரும் நம்புகின்றனர்.
இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ பேருக்கு ஓட்டு போட்டீர்கள். 2026 தேர்தல் ஒரு அதிசயத் தேர்தல். இந்த முறை உங்கள் வீட்டில் இருப்பவருக்கு ஓட்டு போடுங்கள். உங்களுக்கு நீங்களே ஓட்டுப் போடுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என்று நினைத்து ஓட்டு போடுங்கள். மக்களின் பணத்தைத் தொட வேண்டிய அவசியமே எனக்கு இல்லை.
சுற்றி இருப்பவர்களை வைத்து அவதூறு
சுற்றி இருப்பவர்களை வைத்து தேர்தல் நேரத்தில் அவதூறு பரப்புகிறார்கள். ஜனநாயகனை முடக்கி டிஸ்டர்ப் செய்ய நினைத்தார்கள். எதுவுமே நடக்கவில்லை. தேர்தல் நேரத்தில் பக்காவாக ரெடி ஆகி, முதல் ஆளாகச் சென்று விசில் சின்னத்துக்கு உங்கள் ஓட்டைப் போடுங்கள்’’
இவ்வாறு தவெக விஜய் தெரிவித்தார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தவெக, 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறது. எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 232 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.





















