தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் நடிகரும், தவெக தலைவருமான விஜய். முதன்முறையாக அரசியல் களத்தில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
வழிநெடுகிலும் அன்பளிப்பு:
நடிகரும், தவெக தலைவருமான விஜய் திரையுலகின் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் என்பதாலும், அவர் முதன்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கியிருப்பவர் என்பதாலும் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திரையுலகில் மிகவும் பிரபலமானவர்கள் மீது மக்கள் மிகப்பெரிய அளவில் அன்பு செலுத்துவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில், இன்று பரப்புரை சென்ற விஜய்க்கு திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் வழிநெடுகிலும் மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்தது மட்டுமின்றி, அன்பளிப்பு பொருட்களையும் அள்ளித் தந்தனர்.
பூங்கொத்து, கிட்டார், குளிர்பானம்:
தவெக தொண்டர்களும், பொதுமக்களும் விஜய்க்கு குளிர்பானம், கிட்டார், பூங்கொத்துக்கள், கரும்பு, குரான், விஜய்யின் புகைப்படங்கள் என வழிநெடுகிலும் ஏராளமான அன்பளிப்புகளை வழங்கினர். விஜய்யும், அவரது பாதுகாவலர்களும் மக்கள் வழங்கிய அன்பளிப்புகளை அன்புடன் வாங்கி உள்ளே வைத்துக்கொண்டார்.
மேலும், வழியில் அவரது தொண்டர்கள் சிலர் விஜய்க்கு தேங்காய் சுற்றி உடைத்தும், பூசணிக்காய் சுற்றி உடைத்தும் திஷ்டி சுற்றினர். வழிநெடுகிலும் குவிந்திருந்த அவரது ரசிகர்கள் தவெக- கொடியை அவர் மீது வீசியும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதுதவிர விஜய்க்கு பரப்புரை செல்லும் அனைத்து இடங்களிலும் தொண்டர்களும், ரசிகர்களும் வேல் அன்பளிப்பாக அளித்து வருகின்றனர்.
செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தொண்டர்கள்:
விஜய்யும் பதிலுக்கு அவர்கள் மீது தனது பரப்புரை வேன் மீது தூவப்பட்ட பூக்களை அவர்கள் மீது வீசி அவர்களை உற்சாகப்படுத்தினார். விஜய்யின் ஜன்னல் ஓரத்தில் ஓடிச்சென்று பல ரசிகர்களும் செல்ஃபி எடு்த்தும் மகிழ்ந்தனர். அதேசமயம், அவரை இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற ரசிகர்கள் பலர் கீழே விழுந்தும் காயம் அடைந்தனர்.
பரப்புரையைத் தீவிரப்படுத்தும் விஜய்:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 15 நாட்களே இருப்பதால் விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதன் தொடக்கமாக அவர் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். அடுத்தடுத்த நாட்களில் விஜய் தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளிலும் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
