திமுக கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு இயக்கங்களுக்கு தமிழக‌‌ வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

Continues below advertisement

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களுக்கான அரசியல் வாய்ப்புகள் மற்றும் அங்கீகாரம் குறித்து தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், தற்போது பல கட்சிகள் தங்களது அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்க ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்.

Continues below advertisement

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதேபோன்று புரட்சி பாரதம் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகளும் விரைவில் தங்களது முடிவுகளை அறிவிக்கத் தயாராக உள்ளன என்றார். பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக போன்றவற்றால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை சிறு கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களிடையே நிலவி வருவதாகவும், இதனால் சமூக நீதி, சமத்துவம் மற்றும் தமிழர் வாழ்வுரிமையை முன்னிறுத்திய புதிய அரசியல் மாற்றம் அவசியமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த அரசியல் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும், 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளன என்றும் தெரிவித்தார்.

வரவிருக்கும் தேர்தலில் சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் காப்பு, மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் உரிமைகளை முன்வைத்து அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நாளை பல்வேறு கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும், அந்த முடிவுக்கு தமிழக மக்களின் பேராதரவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், திராவிட கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தார். சட்டமன்றம் தினந்தோறும் போர்க்களமாக இருந்தது என்றும், அங்கு தாம் வலுவாக குரல் கொடுத்தது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

தவெக உடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லை என்றும், பண்ருட்டி தொகுதியில் தாம் போட்டியிடமாட்டேன் என்றும் தெரிவித்தார். கட்சிக்கு 1200 வேட்புமனுக்கள் வந்துள்ளதாகவும், இந்த முறை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

நாம் தமிழர் கட்சியுடன் எதிர்காலத்தில் தேவையெனில் கூட்டணி குறித்து சிந்திக்கலாம் என்றும், சீமானுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். நடிகர் மன்சூர் அலிகான் கூட்டணியில் இல்லை, ஆதரவு மட்டுமே தெரிவித்துள்ளதாகவும் விளக்கினார்.

பல்வேறு மொழி பேசும் மக்களை சகோதரர்களாகவே பார்க்கிறோம் என்றும், அவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மன்சூர் அலிகான் குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.