கரூரில் பரபரப்பு; தவெக வேட்பாளர் வாய்ப்பு மறுப்பு- கடுப்பில் அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி!
கரூர் தவெக ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார் தனது ஆதரவாளர்கள் சிலருடன் தவெகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

கரூரில் வேட்பாளராக வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெக ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அரவக்குறிச்சியில் புது முகத்துக்கு வாய்ப்பு
இந்த நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே கார்த்திக் என்ற புதிய நபர் ஒருவருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தவெக அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளரும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த சதீஷ் குமார் என்பவர் மாவட்ட தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
ரசிகர் மன்றம் காலத்தில் இருந்து பயணித்தவர்
ரசிகர் மன்றம் தொடங்கி, மக்கள் இயக்கம் வரை வளர்ந்து, சொந்த செலவில் கட்சிக்காக பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து தொகுதி முழுவதும் இதுவரை பல்வேறு பணிகளை செய்துள்ளார்.

இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் சதீஷ் குமார். நிலையில், மாற்று வேட்பாளரை அறிவித்ததால் மனக்குமுறலில் இருந்த அவர், அதை வெளிப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை வைத்து வந்தார்.
இந்நிலையில் தவெக ஒன்றியச் செயலாளர் சதீஷ் குமார் யாரும் எதிர்பாராத விதமாக, அதிமுகவில் இணைந்துள்ளார். குறிப்பாக கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் சதீஷ்குமார் தனது ஆதரவாளர்கள் சிலருடன் தவெகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















