TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
காரைக்குடியில் பரப்புரையின்போது விஜய்யின் ஒரு கையில் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தையும், மறு கையில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தையும் கையில் ஏந்தி வாக்காளர்களை உற்சாகப்படுத்தினார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பலரது மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம். நடிகர் விஜய் முதன்முறையாக இந்த தேர்தலை எதிர்கொண்டிருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஒரு கையில் அஜித், ஒரு கையில் தோனி:
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் விஜய் தினசரி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவர் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு அன்பளிப்புகளை வழிநெடுக வழங்கி வருகின்றனர். இன்று காரைக்குடிக்கு பரப்புரைக்குச் சென்ற விஜய்க்கு வழிநெடுகிலும் தவெக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் வரவேற்பு அளித்தனர்.
அப்போது, தொண்டர்கள் சிலர் விஜய் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தையும், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தையும் அன்பளிப்பாக வழங்கினர். இந்த இரு புகைப்படத்தையும் தனது இரு கைகளில் ஏந்தி விஜய் தனது தொண்டர்கள் நோக்கி உற்சாகமாக கையை அசைத்தார். இந்த புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஓட்டு முக்கியம் பிகிலு:
தமிழ் திரையுலகில் விஜய்க்கு நிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித். திரையுலகில் இருவரும் கடும் போட்டியாளராக கருதப்பட்டாலும், விஜய்யின் வெற்றிக்கு அஜித்தின் ரசிகர்களின் வாக்குகள் மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இதனால், விஜய் தவெக-வைத் தொடங்கியது முதலே விஜய் ரசிகர்கள் விஜய் - அஜித் இணைந்து இருக்கும் புகைப்படத்தை அதிகளவு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய்க்கும் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை அன்பளிப்பாக தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனிக்கும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சென்னை அணியின் தொடக்க காலத்தில் சிஎஸ்கே விளம்பர தூதராக விஜய் இருந்தார். விளம்பர நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பின்போதும் விஜய்யும் தோனியும் சந்தித்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தையே ரசிகர்கள் இன்று விஜய்க்கு அன்பளிப்பாக அளித்தனர்.
வாக்காக மாறுமா?
வாக்காளர்களை கவர்வதற்காகவும், அவர்களது அன்பை ஏற்கும் விதமாகவும் விஜய் தனது தொண்டர்களும், ரசிகர்களும் அளிக்கும் அன்பளிப்புகளை பெரும்பாலும் பெற்றுக்கொள்கிறார். விஜய் ரசிகர்கள் முன்பு இணையத்தில் அஜித் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இணையத்தில் ரஜினி ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தேர்தலில் விஜய்க்கு எதிராக எதிரொலிக்குமா? விஜய் அஜித் இணைந்து இருக்கும் புகைப்படங்களை விஜய்க்கு அன்பளிப்பாக அளிப்பதால் அது ஆதரவாக எதிரொலிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















