தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது முதலே ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் அரசியல்களம் அனல் பறக்கத் தொடங்கியது. இந்த தேர்தலில் பொதுமக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் மீதே எழுந்துள்ளது.
அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்வதே அதற்கு காரணம். ரசிகர்களின் பலத்தை நம்பி களத்தில் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் தற்போது வரை கூட்டணிக்குள் வர எந்த கட்சியினரும் முன்வரவில்லை. இந்த நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்தே தவெக பாேட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் சென்னையிலே களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1. விஜய்:
தவெக தலைவரும், நடிகருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கருதப்படுகிறது. வி வரிசையில் தொடங்கும் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று ஆருடம் கணிக்கப்பட்ட நிலையில், அவர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் போட்டியிடுவதற்காகவே பெரம்பூர் தொகுதி கடந்த பல மாதங்களாக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. வட சென்னை தவெக மாவட்டச் செயலாளர் பெரம்பூர் தொகுதியில் தவெக உறுப்பினர் எண்ணிக்கையை பலப்படுத்தியதே அதற்கு காரணமாகவும் கருதப்படுகிறது.
2. புஸ்ஸி ஆனந்த்:
தவெக-வின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் சென்னையின் தி.நகர் தொகுதியில் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தற்போது தி.நகர் தொகுதி திமுக வசம் உள்ளது. விஜய்யுடன் பல ஆண்டுகளாக பக்கபலமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் இந்த தொகுதியில் களமிறங்க தீவிரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3. ஆதவ் அர்ஜுனா:
தவெக-வில் விஜய்யின் முக்கிய ஆலோசகராக கருதப்படுபவர் ஆதவ் அர்ஜுனா பதவி. அக்கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா வில்லவிவாக்கம் தொகுதியில் களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியைப் பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையிலே களமிறங்க உள்ளார்.
4. ஜேசிடி பிரபாகர்:
அதிமுக-வில் இருந்து தவெக-வில் இணைந்துள்ள மூத்த அரசியல்வாதியான ஜேசிடி பிரபாகர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று கருதப்படுகிறது. திமுக-வின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் தனது முன்னாள் ஆதரவாளர்கள் மற்றும் தவெக ஆதரவு பலத்தை நம்பி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
5. மரிய வில்சன்:
எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாக இருந்தவரும், எம்ஜிஆர் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான ஜேப்பியாரின் மருமகன் மரியவில்சன். இவர் தவெக-வின் முக்கியமான நிர்வசகிகளில் ஒருவராக உள்ளார். இவர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கடந்த சில மாதங்களாகவே ஆர்.கே.நகர் தொகுதியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
6. தவெக பொருளாளர் வெங்கட்ராமன்:
தவெக-வின் பொருளாளராக பொறுப்பு வகிக்கும் வெங்கட்ராமன் சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியை அதிமுக, திமுக-வே மாறி, மாறி கைப்பற்றி வந்த நிலையில் தவெக தனது ஆதிக்கத்தை காட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் களமிறங்குவது ஏன்?
தவெக-வின் முக்கிய தலைவர்கள் அனைவரும் சென்னையில் களமிறங்குவதற்கு முக்கிய காரணம் விஜய் ரசிகர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், தவெக ஆதரவு அதிகளவு இருப்பதாலே என்று கூறப்படுகிறது. அதேசமயம், திமுக-வை தங்கள் கோட்டையாக திமுக வைத்துள்ள நிலையில், தவெக அதை எப்படி சமாளிக்கும்? என்ற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.
இவர்கள் தவிர தவெக-வின் முக்கிய தலைவரான செங்கோட்டையன் தனது சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்திலே களமிறங்க உள்ளார்.
