சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறேன் என சொன்னபோது அவர் மீது பல அவதூறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். 

Continues below advertisement

ஆதவ் அர்ஜூனா விமர்சனம் - ரஜினி கண்டனம்

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசை கண்டித்து நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தின் போது ரஜினி அரசியலுக்கு வரும்போது அவருக்கு திமுக மிரட்டல் விடுத்தது. அக்கட்சியை எதிர்க்கும் மனவலிமை ரஜினிக்கு இல்லை என ஆதவ் அர்ஜூனா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ரஜினி ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இந்த பிரச்னையை 4 நாட்கள் கழித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கையில் எடுத்தனர். சமூக வலைத்தளம் மூலம் ஆதவ் அர்ஜூனாவை கண்டித்தனர். 

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும், ஆதவ் சொன்ன கருத்து உண்மைக்கு மாறானது என்றும், காலம் பதில் சொல்லாது, காலம் காத்திருந்து பதில் சொல்லும் என அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்தார். 

Continues below advertisement

திமுக மிரட்டியது இப்படித்தான்

இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதவ் அர்ஜூனா ரஜினி பற்றிய தன்னுடைய கருத்துக்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்டார். மேலும் அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நம்முடைய ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறேன் என சொன்னபோது நானும் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தோம். அதில் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என சொன்ன உடனேயே கிட்டதட்ட 18 சதவிகித ஓட்டு இருப்பது தெரிய வந்தது. இதில் நான் உண்மையை தான் சொல்கிறேன். அது அவருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. நான் களத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த 18 சதவிகித வாக்கு வங்கி இருப்பது தெரிய வந்ததும் திமுகவுக்கு பயம் வந்து விட்டது. 

அப்போது ரஜினி மீது என்ன மாதிரியான போலி கருத்துகளை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டார்கள். இதைத்தான் நான் மிரட்டல் என சொன்னேன். அதற்கு திமுக குடும்பம் ரஜினியை கூப்பிட்டு மிரட்டினார்கள் என சொல்லவில்லை. ரஜினிக்கு எதிராக என்ன மாதிரியான பிரச்சாரத்தை உருவாக்குவது, அவதூறு சொற்களை பேசுவது என்பது நோக்கமாக இருந்தது. அன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த் மீது என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை எல்லாம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். எவ்வளவு அசிங்கமாக பேசினார் என்பது தெரியும். ரஜினி பாஜகவின் பி டீம், மிரட்டி தான் அவரை பாஜக அரசியலுக்கு கொண்டு வந்தது என இவற்றையெல்லாம் உருவாக்குனது திமுக.

அதுமட்டுமல்லாமல் அன்றைய அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையான சொற்களைப் பேசினார். இவையனைத்தும் சமூக வலைத்தளத்தில் வந்து விட்டது. இந்த மாதிரி  ஒரு கட்சி வரும்போது, இந்த அமைப்பை மாற்ற வேண்டும் என சொல்லும்போது, ஊழலை ஒழிக்க வேண்டும் என சொல்லும்போது கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொள்கின்றன. ரஜினி அரசியலில் பணம் சம்பாதிக்க வரவில்லை. அவர் சினிமாவில் ஏற்கனவே சம்பாதித்து விட்டார்.

இப்படியான நிலையில் ஒரு சூழ்ச்சிகளை தனது கட்சி கட்டமைப்புகள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் உருவாக்கி பல்வேறு அழுத்தங்களை வெளியில் இருந்து கொடுத்தார்கள். திமுகவின் சூழ்ச்சிகளை தான் நான் பதிவு செய்தேன். அதை விட்டு நான் ரஜினியை சிறுமைப்படுத்த எண்ணவில்லை” என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.