நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக 93 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.


 



கோவை மாநகராட்சி


திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டு எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 



திமுக - மதிமுக உடன்பாடு


திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி இடையே வார்டு ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இரட்டை இலக்க வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பும் நிலையில், 5 க்கும் குறைவான வார்டுகளை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரட்டை இலக்க வார்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருப்பதாகவும், அதனை கொடுக்க முன் வராத பட்சத்தில் கோவை மாநகராட்சியில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் மற்ற கட்சிகளுடன் சுமுகமாக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சமாதானப்படுத்தி உடன்பாடு எட்டுவதற்கு திமுக முயற்சித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாளைக்குள் உடன்பாடு ஏற்படுத்தி, கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகளின் விபரங்களை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 



திமுக - காங்கிரஸ் உடன்பாடு


கோவை மாவட்டத்தில் உள்ள 811 பதவிகளுக்கு நேற்று வரை 35 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இன்று 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.. கோவை மாநகராட்சியில் இன்று 8 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால், இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. பேரூராட்சிகளில் இன்று 31 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால், இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. நகராட்சிகளில் இன்று 20 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால், இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.