இஸ்லாமியர்களை பயமுறுத்தி வாக்குகளை பெற திமுக கூட்டணி கட்சிகள் சிஏஏ ஆயுதத்தை கையில் எடுத்து பயமுறுத்திகின்றனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அரசியலில் துரோகம் என்ற வார்த்தையை கண்டு அரசியல்வாதிகள் அஞ்சும் படி துரோகம் வீழ்த்தப்படும்
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தனது மனைவியுடன் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். இன்று காலையில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “ஒரு சிலரின் பதவி வெறி மற்றும் துரோகத்தினால் அதிமுக தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அதிகாரம், பண பலம், ஆள் பலம், இருந்த போது கூட ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. அவர் செய்த துரோகத்திற்கு வருங்காலத்தில் பொதுமக்கள் தண்டனை தருவார்கள். பழனிசாமியின் வீழ்ச்சிக்குப் பிறகு அதிமுக மீண்டு எழும், நானும், பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றோம். வருங்கால அரசியலில் துரோகம் என்ற வார்த்தையை கண்டு அரசியல்வாதிகள் அஞ்சும் படி துரோகம் வீழ்த்தப்படும் என்பதற்கு உதாரணமாக பழனிசாமியின் வீழ்ச்சி இருக்கும்.
தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதில் 90 சதவீதம் நிறைவேற்றாத ஆட்சி திமுக ஆட்சி
திமுகவையும், பழனிசாமியையும் இழுத்த பாஜக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் அதன்படி நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம். திமுகவின் மூன்றாண்டு காலம் ஆட்சி என்பது சனியிடம் இருந்து பிடுங்கி எமனிடம் அளித்த கதையாக உள்ளது. விவசாயிகள், அரசாங்க ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள் என பல தரப்பினருக்கு தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதில் 90 சதவீதம் நிறைவேற்றாத ஆட்சி திமுக ஆட்சி, நாங்கள் சரியானவர்கள் என்பதால் தான் பிஜேபி எங்களை அவர்கள் கூட்டணியில் சேர்த்து உள்ளது. உலக நாடுகள் அனைவரும் போற்றக்கூடிய தலைவராக பிரதமராக மோடி உள்ளார். மத்திய அரசு கொடுக்கக்கூடிய நிதியை வெளியே சொல்லாமல் மத்திய அரசு மாநிலத்துக்கு நிதி தரவில்லை என திமுகவினர் மறைக்கின்றனர். தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பதை தினம் தினம் நேரில் பார்த்துக் கொண்டு உள்ளோம்.
அண்ணாமலை போன்ற தலைவர்களின் உழைப்பால் பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது
யாருடைய குடியுரிமையையும் பறிக்கிற சட்டம் அல்ல சி.ஏ.ஏ. குடியுரிமை கொடுக்கிற சட்டம் சி.ஏ.ஏ. குடியுரிமை தர வேண்டும் என்றால் அது மத்திய அரசுதான் தரவேண்டும். மாநில அரசு அல்ல, சி.ஏ.ஏ.சட்டம் கொண்டு வருவது தவறு இல்லை. இஸ்லாமியர்களை பயமுறுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணி கட்சிகள் சிஏஏ என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து பயமுறுத்தி வருகிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது, அண்ணாமலை போன்ற தலைவர்களின் உழைப்பால் பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது. அது இந்த தேர்தலில் எதிரொலிக்கும், கூடியவிரைவில் நான் பிரச்சாரம் மேற்கொள்வேன், பாஜகவிடம் எந்தவித நிபந்தனை இல்லாமல் கூட்டணியில் உள்ளோம், மற்றவர்களுக்கு கொடுத்த சீட்டுக்கு பிறகு இருந்தால் எனக்கு கொடுக்கட்டும் என்றுதான் பாஜகவிடம் தெரிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.