தஞ்சாவூர் ..
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், ஆடுதுறை, அம்மாபேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேசுவரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதூர், வல்லம், வேப்பத்தூர் ஆகிய 20 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 459 உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் பெருமகளூர் பேரூராட்சியில் இரு வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அனுசுயா மாரடைப்பால் காலமானதால், அந்த வார்டின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் 456 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், மாநகராட்சிகளில் 62.45 சதவீதமும், நகராட்சிகளில் 64.95 சதவீதமும், பேரூராட்சிகளில் 72.18 சதவீதமும் என மாவட்டத்தில் சராசரியாக 66.12 சதவீத வாக்குகள் பதிவாகின.
எத்தனை சதவீதம்..
இதில், தஞ்சை மாநகராட்சியில் 61 சதவீதமும், கும்பகோணம் மாநகராட்சியில் 65 சதவீதமும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 66 சதவீதமும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 சதவீதமும், பேரூராட்சிகளான ஆடுதுறையில் 71 சதவீதமும், அம்மாபேட்டையில் 71 சதவீதமும், அய்யம்பேட்டையில் 60 சதவீதமும், சோழபுரத்தில் 69 சதவீதமும், மதுக்கூரில் 64 சதவீதமும், மேலத்திருப்பூந்துருத்தியில் 72 சதவீதமும், மெலட்டூரில் 76 சதவீதமும், ஒரத்தநாட்டில் 74 சதவீதமும், பாபநாசத்தில் 72 சதவீதமும், பேராவூரணியில் 74 சதவீதமும், பெருமகளூரில் 83 சதவீதமும், சுவாமிமலையில் 79 சதவீதமும், திருக்காட்டுப்பள்ளியில் 77 சதவீதமும், திருநாகேஸ்வரத்தில் 73 சதவீதமும், திருப்பனந்தாளில் 74 சதிவீதமும், திருபுவனத்தில் 71 சதவீதமும், திருவையாறில் 75 சதவீதமும், திருவிடைமருதுரில் 67 சதவீதமும், வல்லத்தில் 76 சதவீதமும், வேப்பத்தூரில் 79 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை..
தஞ்சாவூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியிலும், கும்பகோணம் மாநகராட்சி வாக்குகள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை நகராட்சி வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அதிராம்பட்டினம் நகராட்சி வாக்குகள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலை, அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளன.
மொத்தம் 5 சுற்றுகள் எண்ணப்படவுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் 12 வார்டுகள் வீதம் நான்கு சுற்றுகளில் 48 வார்டுகளுக்கும், ஐந்தாவது சுற்றில் மீதமுள்ள 3 வார்டுகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. எனவே, நண்பகல் 12 மணியளவில் அனைத்து முடிவுகளும் தெரிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 3 அறைகளில் 3 மேஜைகள் வீதம் மொத்தம் 9 மேஜைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்படவுள்ளன.
கடும் போட்டி...
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிக்கும் மேயர் பதவிக்கு பொது வேட்பாளராக ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம் நகர் மன்ற தலைவராக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சியிலுள்ள 51 வார்டுகளில், 51 வார்டுகளில் 282 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக 50 வார்டுகளிலும், தமாகா ஒரு வார்டிலும், திமுக கூட்டணியில் திமுக 41 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன. இதில், 40 வார்டுகளில் திமுக- அதிமுக இடையே நேரடி போட்டி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி 48 வார்டுகளிலும், அமமுக 43 வார்டுகளிலும், பாஜக 27 வார்டுகளிலும், எஸ்டிபிஐ 4 வார்டுகளிலும், பாமக 6 வார்டுகளிலும், தேமுதிக 3 வார்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் 2 வார்டுகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. மேலும் 47 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
கும்பகோணம்..
கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முறையாக மேயர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. கும்பகோணம் மாநகராட்சியில் திமுக-அதிமுக 41 வார்டுகளில் நேரடியாக போட்டியிடுகின்றனர். கும்பகோணம் மாநகராட்சியில் 62489 ஆண் வாக்காளர்களும், 66048 பெண் வாக்காளர்களும், மற்ற 3 என மொத்தம் 128540 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 40651 ஆண் வாக்காளர்கள், 43243 பெண் வாக்காளர்கள் மற்ற 1 என மொத்தம் 83895 வாக்காளர்கள் என 65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.