நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்பட்ட சேலத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறது திமுக.


சேலம் மாவட்டம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவால் அசைக்கமுடியாத அளவிற்கு, எடப்பாடி சொன்னது போல  அதிமுகவின் எக்கு கோட்டையாக திகழ்ந்த சேலத்தை தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் உருக்கியிருக்கிறது திமுக.


சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 27 பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 699 இடங்களில் 421 இடங்களை திமுகவும், 147 இடங்களை அதிமுகவும், பாமக 27 இடங்களையும், சுயேட்சைகள் 75 இடங்களையும், காங்கிரஸ் 17 இடங்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 இடத்தையும், தேமுதிக 1 இடத்தையும், பாஜக  3 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர். இதில் கூட்டணி என்று பார்த்தால் திமுக கூட்டணி 446 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன.


சேலம் மாநகராட்சியைப் பொருத்தவரை திமுக  47 இடங்களிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு 7 இடங்கள் மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் திமுக கூட்டணி 50 வார்டுகளில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. 


முக்கியமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார். 19வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற தேன்மொழி திமுகவில் இணைந்துள்ளார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான எடப்பாடி நகராட்சியையும் தகர்த்திருக்கிறது திமுக. மொத்தமுள்ள 30 வார்டுகளில் 16ல் திமுகவும், 1 இடத்தை காங்கிரசும், 13 இடங்களை அதிமுகவும் கைப்பற்றி அதிமுகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்திருக்கிறது திமுக. இந்த வெற்றியின் மூலம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடி நகராட்சியை 50 ஆண்டுகளில் முதல் முறையாக திமுக கைப்பற்றியுள்ளது. 


எடப்பாடி மட்டுமல்லாமல் தாரமங்கலம், இடங்கணசாலை, மேட்டூர், நரசிங்கபுரம், ஆத்தூர் ஆகிய நகராட்சிகளையும் கைப்பற்றியிருக்கிறது திமுக. ஆத்தூரில் 33 வார்டுகளில் 26ஐயும், மேட்டூரில் 30 வார்டுகளில் 20ஐயும் கைப்பற்றியிருக்கிறது திமுக கூட்டணி. இதில் தாரமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக 12 இடங்களை பெற்றிருக்கும் நிலையில், சுயேட்சைகள் 7 வார்டுகளிலும், அதிமுக மற்றும் பாமக 4 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன. 12 இடங்களை திமுக கைப்பற்றியிருந்தாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை என்பதால் அந்த இடத்தில் மட்டும் இழுபறி இருப்பதாகத் தெரிகிறது. அதிமுக,பாமக,சுயேட்சைகள் இணைந்தால் திமுகவுக்கான இடம் போக வாய்ப்பிருப்பதால் சுயேட்சைகளின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


அதேபோல, சேலம் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் 27 பேரூராட்சிகள் திமுக கைப்பற்றியுள்ளது.  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி வெற்றி பெற்று சேலம் அதிமுகவின் கோட்டை என்று நிரூபித்திருந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 9 மாதங்களுக்குள்ளாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி அதிமுகவின் கோட்டையை உடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரம்மாண்ட வெற்றி சாத்தியமானதற்கு அமைச்சர் கே.என்.நேருவை சேலத்திற்கு பொறுப்பு அமைச்சராக திமுக தலைமை நியமித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.  சுற்றிச் சுழன்று வேலை பார்த்த கே.என்.நேரு தனது வியூகங்களால் சேலத்தை முழுமையாக திமுகவின் வசமாக்கியது மட்டுமல்லாமல், திருச்சியையும் திமுக வசமாக்கியிருக்கிறார். திருச்சியில் இதுவரை திமுக மேயர் பதவியை பெற்றதில்லை என்ற நிலையில் முதன் முறையாக திமுகவைச் சேர்ந்த ஒருவர் மேயராகும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர