TN Election 2026 Schedule: 2021 மற்றும் 2026-க்கு இடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனால், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இதனிடையே, 2021 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
2021 Vs 2026 - தேர்தல் அட்டவணை
| தேர்தல் நிகழ்வுகள் | 2021 சட்டமன்ற தேர்தல் அட்டவணை | 2026 சட்டமன்ற தேர்தல் அட்டவணை |
| வேட்புமனு தாக்கல் செய்வதை தொடங்குவதற்கான நாள் | 12.03.2021 | 30.03.2026 |
| வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 19.03.2021 | 06.04.2026 |
| வேட்புமனு மறுபரீசிலனை | 20.03.2021 | 07.04.2026 |
| வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி | 22.03.2021 | 09.04.2026 |
| வாக்குப்பதிவு தேதி | 06.04.2021 | 23.04.2026 |
| வாக்குகள் எண்ணும் தேதி | 02.05.2021 | 04.05.2026 |
2021 Vs 2026 - தேர்தலில் குறைந்த காத்திருப்பு
கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகளை அறிய சுமார் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால், இம்முறை 10 நாட்களிலேயே பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த முறை பிப்ரவரி மாதம் 26ம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. ஆனால், இந்த முறை சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் காரணமாக, மார்ச் 15ம் தேதி தான் தேர்தல் அட்டவணையே வெளியாகியுள்ளது. இதனிடையே, வழக்கமாக புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால், இந்த முறை புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதியும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 Vs 2026 - வாக்காளர் விவரங்கள்
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 6 கோடிக்கும் அதிகமாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது, 5 கோடியே 76 லட்சத்துக்கு குறைந்துள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
| வாக்காளர் விவரங்கள் | 2021 சட்டமன்ற தேர்தல் | 2026 சட்டமன்ற தேர்தல் |
| மொத்த வாக்காளர்கள் | சுமார் 6.28 கோடி | சுமார் 5.67 கோடி |
| ஆண் வாக்காளர்கள் | சுமார் 3.08 கோடி | சுமார் 2.77 கோடி |
| பெண் வாக்காளர்கள் | சுமார் 3.18 கோடி | சுமார் 2.89 கோடி |
| முதல் முறை வாக்காளர்கள் | சுமார் 8.97 லட்சம் | 12, 51,749 |
| மூன்றாம் பாலினத்தவர் | சுமார் 7,200 | சுமார் 7,617 |
| மிகப்பெரிய தொகுதி | சோழிங்க நல்லூர் (சுமார் 6.94 லட்சம் வாக்காளர்கள்) | சோழிங்க நல்லூர் (சுமார் 5.36 லட்சம் வாக்காளர்கள்) |
| சிறிய தொகுதி | சென்னை துறைமுகம் (சுமார் 1.7 லட்சம்) | சென்னை துறைமுகம் (சுமார் 1.16 லட்சம்) |
2021 Vs 2026 - முதலமைச்சர் வேட்பாளர்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இதுபோக நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மற்றும் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் ஆகியோரும் முதலமைச்சர் வேட்பாளர்களாக களம் கண்டனர். ஆனால் இந்தமுறை கமல்ஹாசன் இடத்திற்கு விஜய் வந்துள்ளார். அதேநேரம், மக்கள் நீதிமய்யமோ திமுக கூட்டணியில் இரண்டு இடங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் அதிமுகவிற்கு எதிராக கூட்டணியை உருவாக்கி தீவிரமாக களமாடிய டிடிவி தினகரன், இந்த முறை எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக அங்கீகரித்து கூட்டணியில் இணைந்துள்ளது. அதன் முடிவில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
