நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெற முடியாமல் அதிமுக தோல்வியை தழுவியது. குறிப்பாக அந்த கட்சியின் 11 அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். கோவை, தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் அதிமுகவிற்கு கணிசமான தொகுதிகள் கிடைத்த நிலையில், டெல்டா, சென்னை உள்ளிட்ட மண்டலங்களில் கணிசமான இடங்களில் திமுக தான் ஒட்டுமொத்த வெற்றியையும் பதிவு செய்தது. 




அதிமுகவின் தோல்வியில் மற்றொரு சிறப்பு அம்சத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இம்முறை அதிமுக சார்பில் 16 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டன. அவர்களில் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அந்த மூன்று பேரும் தனித் தொகுதியின் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இடங்களில் தோல்வியடைந்த பெண் வேட்பாளர்களில் பலர் விஐபி அந்தஸ்து பெற்றவர்கள். 




குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோரும் தோல்வி அடைந்தது தான் அதிமுகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெண் வேட்பாளர்கள் அதிமுகவிற்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இருப்பினும் சில தொகுதிகளில் சில பெண் வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு நல்ல நெருக்கடியை கொடுத்துள்ளனர். 


கடைசி சுற்றுவரை முன்னேறி இழுபறிக்கு பின் வெற்றியை தவறவிட்ட வேட்பாளர்களும் உள்ளனர். இருப்பினும் போட்டியில் வெற்றி, தோல்வியை தவிர வேறில்லை என்பதால் அவர்களின் தோல்வி தோல்வியே. பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அதிமுக தரப்பில் தரப்பட்டும், அது வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆறுதலாக மூன்று வேட்பாளர்கள் மட்டும் வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சிக்கு உண்மையிலேயே ஆறுதல் தான்.




பெண் வேட்பாளர்களை பொறுத்தவரை  பெரும்பாலும் அவர்களின் குடும்பத்தாரின் தலையீட்டில் இருப்பார்கள் என்கிற பேச்சு பரவலாக இருக்கும். சில பிரபலங்களின் தோல்விக்கு பின்னால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல்பாடு ஒரு காரணமாக இருந்திருக்கிறது. ஜெயலலிதா போன்ற ஒரு பெண் ஆளுமை வழிநடத்திய கட்சி, ஆட்சி செய்த ஆட்சியில் பெண் வேட்பாளர்கள் கணிசமாக தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியின் வேட்பாளர் தேர்வு மீது சந்தேகத்தை எழுப்புகிறது. 




இன்னும் நல்ல செல்வாக்கு கொண்டிருந்த பெண் வேட்பாளர்கள் பலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காமல் போனதும், பிரபலங்கள் முன்னாள் அமைச்சர்கள் என்கிற காரணத்திற்காக குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியதும் தோல்விக்கு முக்கிய காரணமாகும். வெறுமனே போட்டியிட மட்டும் தொகுதிக்கு வந்த பெண் வேட்பாளர்கள் சிலர், தொகுதிப்பணியில் கோட்டை விட்டோர் என குறிப்பிடும் படியானோர் தான் இந்த முறை தோல்வியை தழுவியிருக்கிறார்கள் என்கிறது அதிமுகவின் ஒரு தரப்பு. எது எப்படியோ வரும் காலங்களில் மீண்டும் பெண் வேட்பாளர்கள அதிமுகவில் எழுச்சி பெற அக்கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கலாம்.