சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது தமிழக வெற்றிக் கழகம். உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் தவெக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இதனால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் காசி போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளரை அதே தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ள நிலையில், தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்துள்ளனர். உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார். இதே காரணத்திற்காக, மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேட்பு மனு பரிசீலனையின் போது எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த தவெக வேட்பாளர் அருண்குமார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்ட நிலையில், தவெக வேட்பாளரை கடத்தி சென்று விட்டதாக கூறி அக்கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சமாதானப்படுத்தினர். திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய அருண்குமார் திடீரென தவெகவில் இணைந்து போட்டியிடும் நிலையில், அவர் தனது வேட்புமனுவை வேண்டுமென்றே கவனக்குறைவாக தாக்கல் செய்துவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
