கடலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி டீ போட்டுக் கொடுத்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. அன்று எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று தமிழ்நாடு உள்பட பிற மாநில மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது.
இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்க்கு ஆதரவாக அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள உழவர் சந்தை, பேருந்து நிலையம், பூ மார்க்கெட் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதிமுகவின் கடந்த கால சாதனைகளை பட்டியலிட்டு துண்டுபிரசங்களை வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது டீக்கடை ஒன்றில் மாஸ்டர் உடன் உதவி செய்து பொதுமக்களுக்கு டீ கொடுத்து வாக்கு சேகரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அம்மா உணவக வாயில் முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அப்சரா ரெட்டியிடம் பெண்கள் திமுக ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகத்தில் உணவு முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் கடலூர் அதிமுக அவைத் தலைவர் சேவல் குமார், திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
