TVK Vijay: விஜய் 2 தொகுதிகளில் போட்டி.. தோல்வி பயம் காரணமா? - ஆதவ் அர்ஜூனா பரபரப்பு விளக்கம்!
விஜய் பிறந்த இடம் என்பதால் சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்துள்ளார் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான ஒருமுகமாக இருக்க வேண்டும் என்று தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். இது பிற அரசியல் கட்சியினரிடையே காரசார விவாதமாக மாறியுள்ளது. தோல்வி பயம் காரணமாகவே 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என விமர்சனங்கள் வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கமளித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “எப்பவும் விஜய் ஒரு தலைநகரின் முகமாக மட்டும் இருக்க வேண்டும் என நினைப்பதில்லை. அவர் தமிழ்நாட்டுக்கான தலைவர். அப்படி இருக்கும்போது புரட்சித்தலைவர் அப்பவே திருச்சியை இன்னொரு தலைநகராக கொண்டு வர வேண்டும் என நினைத்தார். எப்பவும் சென்னையில் மட்டும் முடிவு பண்ணி, சென்னையை சுற்றியிருக்கும் நகரங்கள் மட்டும் வளர்ச்சி பெற வேண்டும் என்பது முக்கியம் கிடையாது. விஜய் பிறந்த இடம் என்பதால் சென்னையில் ஒரு தொகுதியையும், தமிழ்நாட்டின் மைய மாவட்டமாக திகழும் திருச்சியிலும் போட்டியிட்டு அங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் போட்டியிடுகிறார்.
அப்படி அவர் அங்கு களமிறங்கும்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான நிர்வாகத்தை கட்டமைக்கவும், நான் சென்னைக்கான தலைவர் மட்டும் கிடையாது என்பதை நிரூபிக்கவும், திருச்சியில் களமிறங்குகிறார். இந்த வழியில் தான் எம்ஜிஆர் எப்போதும் தெற்கு தொகுதியை தேர்வு செய்வார். அதன்படி திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் தொகுதியையும் விஜய் தேர்வாக உள்ளது.
ஒரு மத்திய மாவட்டத்தில் வெற்றி பெறும்போது மக்களின் குறைகளை கேட்க ஒரு வசதி வாய்ப்பாக இருக்கும். விஜய் முதலமைச்சரான பிறகு சென்னையில் தான் இருக்க வேண்டி இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான ஒருமுகமாக இருக்க வேண்டும் என்று தான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். விஜய்க்கு பயம் என சொல்கிறார். தைரியம் இருந்திருந்தால் விஜய் போட்டியிடும் தொகுதியில் உதயநிதியை களமிறக்கியிருக்க வேண்டும். ஏதோ ஒரு வேட்பாளரை போட்டியிட வைத்திருக்கிறார்கள். நாங்கள் 2 மாதங்களுக்கு முன்பே தொகுதியை முடிவு செய்து விட்டோம். ஆளும் கட்சிக்கும் இது தெரியும். 24 கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்கிறது. 75 ஆண்டு கால திமுக நினைத்திருந்தால் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நின்று வெற்றி பெற்றிருக்கலாமே?
செந்தில்பாலாஜி கூட கரூரை விட்டு விட்டு கோவை தெற்கு தொகுதிக்கு சென்று விட்டார். கரூர் மக்கள் தான் என் உயிர் என சொன்னார். திமுக 200 தொகுதி ஜெயிக்கும் என சொல்கிறார்கள். அப்புறம் ஏன் செந்தில்பாலாஜி தொகுதி மாற வேண்டும்? . இதுவே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதற்கான சாட்சி” என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















