விசில் அடிப்பவர்களை சட்டசபைக்கு அனுப்ப வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக விமர்சித்து கடலூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தீவிரமாகும் தேர்தல் பரப்புரை
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், டாக்டர் ராமதாஸ் - சசிகலா கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், முக்குலத்தோர் புலிப்படை என 25 கட்சிகள் இணைந்துள்ளது.
அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இப்படியான நிலையில் கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தவெக மீது தாறுமாறு விமர்சனம்
இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “சங்க்பரிவார் கும்பலுக்கு தமிழ்நாட்டில் என்றும் இடமில்லை. அவர்களை என்றும் காலூன்ற விடமாட்டோம். இது உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்று வட இந்திய மாநிலம் இல்லை. இது தமிழ்நாடு. பெரியார், அண்ணாவின் மண். கலைஞர் கருணாநிதி கட்டிக்காத்து மு.க.ஸ்டாலின் வழிநடத்தக்கூடிய சமூக நீதிக்கான மண் இதுவாகும். அதனால் தான் திருமாவளவன் உடும்பு பிடியாக மு.க.ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்கிறேன். எங்களுக்கு எவ்வளவு இடம் என்பதில் பிரச்னை இல்லை. இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும். கட்டிக்காத்த சமூக நீதி அரசியலை பாதுகாக்க வேண்டும். வலதுசாரி கும்பலுக்கு இங்கு இடமில்லை என ஏப்ரல் 23ம் தேதி தீர்ப்பு எழுத வேண்டும். மே 4ம் தேதி அந்த தீர்ப்பு வெளிவர வேண்டும்.
234 இடங்களில் 200 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். விசிக தொண்டர்களே ஒவ்வொரு ஓட்டும் முக்கியமாகும். விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள், சட்டசபைக்கு வேண்டாம். அங்கு விசிலடிக்க முடியாது. இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய திராவிட மாடல் அரசை மீண்டும் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்” என தெரிவித்தார்.
