தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில் அரசியல் களம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது. 

Continues below advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் களப்பணி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் விஜய் தேர்தல் பரப்புரையை மிக தீவிரமாக திட்டமிட்டு வருகிறார். ஆனால் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி, கடுமையான நிபந்தனைகள் காரணமாக தேர்தல் பரப்புரை சில இடங்களில் தள்ளிக்கொண்டே செல்கிறது. 

திணறப்போகும் திருநெல்வேலி 

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே விஜய் இன்று தென்மாவட்ட கோட்டையாக கருதப்படும் திருநெல்வேலியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக 51 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் திருநெல்வேலிக்கு வருகை தந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற உறுப்பினர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொள்கிறார். 

Continues below advertisement

இந்நிகழ்ச்சியானது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பகல் 1 மணி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

பிரமாண்ட ரோடு ஷோவுக்கு ஏற்பாடு

அதன்பின்னர் அங்கிருந்து தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் K.T.C.நகர் வழியாக சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் விஜய் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார். பின் சாலை மார்க்கமாக தூத்துக்குடி விஜய் செல்கிறார். மாலை 3 மணி முதல் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை ரோடு ஷோ நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் விஜயின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்ச்சிக்கு, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்,சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.  

நள்ளிரவில் குவிந்த தொண்டர்கள்

இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு நள்ளிரவு முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயின் பரப்புரை வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பொதுமக்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் காவல்துறையினரும், தனியார் பாதுகாவலர்களும் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.