TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
TN Election 2026 Nomination: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

TN Election 2026 Nomination: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருப்பம் தெரிவித்து இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் - இன்றே கடைசி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை தொடங்கினாலும், இடையில் நான்கு நாட்கள் அரசு விடுமுறையாக இருந்தது. இதுபோக காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் இரண்டு தேசிய கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. கடைசி நாளான இன்று குறிப்பிட்ட இரண்டு கட்சிகளில் இருந்து மட்டுமின்றி,திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளிலும் இதுநாள் வரை வேட்புமனு தாக்கல் செய்யாதவர்கள் இன்று அந்த பணியை முடிக்க தீவிரம் காட்ட உள்ளனர். இதனால், தேர்தல் அலுவலர்களின் அலுவலகங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக காலை 11 மணி தொடங்கி பிற்பகல் மூன்று மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஒருவேளை இன்று கூட்டம் அதிகமாக இருந்தால், வேட்பாளர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3,430 வேட்புமனுக்கள்
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் 23ம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வேட்பாளர்களாக களமிறங்க திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என இதுநாள் வரை 3 ஆயிரத்து 430 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். கடைசி நாளான இன்று பல நூறு பேர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து வரும் 9ம் தேதியுடன் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு முடிவுற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
வேட்புமனுக்கள் புள்ளி விவரம் எப்படி?
மூன்று நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 2 ஆயிரத்து 731 பேர் ஆண்களாவும், 689 பேர் பெண்களாகவும் உள்ளனர். வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தொகுதியில் போட்டியிட திருநங்கை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ள ஒரே ஒரு திருநங்கை வேட்பாளர் இவரே ஆகும். ஒருவேளை தங்களது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டால், மாற்று வேட்பாளராக களமிறக்க தங்களது குடும்பத்தினரையே பல வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.
எந்தெந்த தொகுதிகளில் அதிக வேட்புமனுக்கள்:
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட இதுநாள் வரை 84 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து தொண்டாமுத்தூரில் 34 பேரும், குளித்தலையில் 31 பேரும், கோவை தெற்கில் 30 பேரும், பர்கூரில் 29 பேரும், தியாகராய நகர், திருச்செங்கோடு மற்றும் சேலம் மேற்கு தொகுதிகளில் தலா 28 பேரும், கோபிச்செட்டிப்பாளையம், ராயபுரம், மதுரவாயல், ஆகியவற்றில் தலா 27 பேரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக பவானிசாகர் தொகுதியில் 5 பேரும், ராதாபுரம் தொகுதியில் 7 பேரும் மட்டுமே இதுநாள் வரை வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய நாளின் முடிவில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















