பொன்னேரி அருகே திருமணம் முடிந்த உடனே மறு வீடு கூட செல்லாமல் புதுமணத் தம்பதிகள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 70 சதவீகிதம் வாக்கானது பதிவாகியுள்ள்து. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிகப்பட்சமான வாக்குகள் பதிவாகியுள்ளது, 3 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டம் 76.43 சதவீத வாக்குப் பதிவுடன் முதல் இடத்தில் உள்ளது. குமாரபாளையம் தொகுதியில் 80 சதவீத வாக்காளர்கள், தங்களின் வாக்குகளைச் செலுத்தி உள்ளனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 61.91% வாக்குகளை மட்டுமே பதிவாகுயுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரியன்வாயலை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் சுபாஷ், கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரம்யா இருவருக்கும் காலை மீஞ்சூரில் திருமணம் நடைபெற்றது. இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், மறு வீட்டிற்கு கூட செல்லாமல் புதுமண தம்பதியினர் நேரடியாக தங்களது ஜனநாயக கடமையாற்ற வந்திருந்தனர்.
அரியன்வாயல் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மணமகன் சுபாஷ் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தொடர்ந்து தனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்னை கொருக்குப்பேட்டைக்குச் சென்று ஜனநாயக கடமை ஆற்ற உள்ளதாகவும் அனைவரும் கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என மணமகன் சுபாஷ் கேட்டுக்கொண்டார்.
இதே போல மீஞ்சூரை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணிற்கும் நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்த விஷால் என்ற இளைஞருக்கும் இன்று காலை மீஞ்சூரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் விஷால் தனது மனைவி மோனிஷாவை அழைத்துக் கொண்டு நெய்தவாயல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அடுத்தடுத்து புதுமண தம்பதிகள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திய சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது
