தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு பிரச்சாரப் பாடலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எழுதி,பாடி வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவுப் பெறுகிறது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக அரசியல் களம் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியை எதிர்கொள்கிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், முக்குலத்தோர் புலிப்படை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளது. 

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் முழுமையாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடங்கி ம.நீ.ம நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டனர். இந்த நிலையில் “தலைவன் இருக்கின்றான்” என்ற சிறப்பு பிரச்சாரப் பாடலை கமல்ஹாசன் எழுதி, பாடி வெளியிட்டுள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது.  இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது.

தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பாடல் பின்வரும் வரிகளுடன் கூடிய ஒரு வலிமையான மற்றும் வீரியமிக்க செய்தியைத் தாங்கி நிற்கிறது. அது“இதுவே வெற்றிப் படை, ஒதுங்கிக்கொள், ஒதுங்கிக்கொள்” என்பது தான்.  தமிழ்நாட்டின் வெற்றியை அறிவிக்கும் திராவிட சிங்கத்தின் கர்ஜனையாக வெளிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல் #TheLeaderIsHere என்ற செய்தியுடன் மக்களை ஒன்றிணைத்து, எதிர்காலத்தை பொதுமக்களின் கரங்களில் ஒப்படைக்கிறது” என தெரிவித்தார்.

இப்பாடலை வெளியிடும் பதிவில் கமல்ஹாசன், இப்போது இது உங்கள் கைகளில் உள்ளது. நல்லுள்ளங்கள் இதைக் கேட்பீர்களாயின், தயவுசெய்து இதைப் பரவலாகப் பரப்புங்கள்  என தெரிவித்திருந்தார்.