TN Election 2026 Campaign: அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளனர் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாகவும், வீதியாகவும் வாக்களர்கள் வாக்கு சேகரிக்க, பிரதான தலைவர்கள் ரோட் ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த அரசியல் கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தலைவர்களின் இன்றைய பரப்புரை விவரம் (ஏப்.18)
- பிரதமர் மோடி: மாலை 5 மணி - கோவை பொதுக்கூட்டம்
- ராகுல்காந்தி: காலை 11.55- பொன்னேரி, மதியம் 1.15 மணி- சோளிங்கர், மாலை 4 மணி- துறையூர்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மாலை 5 மணி திருப்பூர், இரவு 7 மணி- மேட்டுப்பாளையம்,
- அதிமு. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: காலை 9 மணி- திருச்செங்கோடு, மதியம் 3 மணி- கரூர், மாலை 5 மணி- ஈரோடு
- தவெக தலைவர் விஜய்: சென்னை
- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: சிதம்பரம், சீர்காழி
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: திருச்செங்கோடு, மொடக்குறிச்சி
- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: விருத்தாசலம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்: கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்: கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை
- பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்: குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி
- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நத்தம், ஒட்டன்சத்திரம்
- நடிகர் சத்யராஜ்: திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர், வில்லி வாக்கம், திரு.வி.க.நகர், அண்ணாநகர்
வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த நாளன்று பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்த பிறகு, முதல்முறையாக நேற்று தான் பெரம்பூர் சென்று விஜய் வாக்காளர்களை சந்தித்தார். தொடர்ந்து இன்று விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளாராம். இதுநாள் வரை பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோ மூலம் மட்டுமே பரப்புரை மேற்கொண்ட விஜய், முதல்முறையாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
தனித்தனி ரூட்டில் ஸ்டாலின், ராகுல் காந்தி
திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, நடப்பு சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக முதல்முறையாக இன்று தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி பரப்புரை மேற்கொள்ளமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட பயணத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ள முடியாததே இதற்கு காரணமாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் தீராததே ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் தோன்றாததற்கு காரணம் என சத்தியமூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
