TN Election 2026: திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி - தொகுதிப் பங்கீடு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீட்டை திமுக தொடங்கியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் ஒதுக்கப்பட்டதை காட்டிலும், கூடுதல் தொகுதிகளை கோர உள்ளதாக பல கட்சிகளும் தெரிவித்துள்ளன. இதுபோக எந்த கட்சிகளுக்கான தொகுதிகளை குறைத்து, புதியதாக கூட்டணியில் இணைந்துள்ள, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்கான இடங்களை திமுக ஈடுகட்ட உள்ளது? அல்லது தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை திமுக குறைத்துக் கொள்ளுமா? என்ற கேள்வியும் தீவிரமடைந்து கொண்டுள்ளது. இப்படி தொகுதிப் பங்கீடு தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் சின்னம் தொடர்பான சிக்கலும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளதாம்.
உதயசூரியன் சினம் ஒகே வா?
எதிர்க்கட்சிகளின் கூட்டணி மற்றும் வழக்கமாக ஆளுங்கட்சிகள் மீது எழும் அதிருப்திகள் ஆகியவற்றை சமாளிப்பதற்கான வழிகளை அறிவாலயம் தரப்பு பரிசீலித்து வருகிறதாம். அதன்படி, 170 தொகுதிகளுக்கு குறையாமல் நேரடியாக வேட்பாளர்களை களமிறக்கவும், உதயசூரியன் சின்னத்திலேயே கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலரை களமிறக்கவும் திமுக முனைப்பு காட்டுகிறதாம். உதாரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சி 3 தொகுதிகள் வேண்டும் என நிர்பந்தித்தால், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டால் அந்த ஒப்பந்தத்தை திமுக ஏற்குமாம். சொந்த டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றால், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையின் போதே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அறிவுறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாம்.
உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதுபோக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 14 பேரையும் தங்களது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது. அதில் மதிமுகவின் 6 வேட்பாளர்கள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் 3 வேட்பாளர்கள், மனித நேய மக்கள் கட்சியின் 2 வேட்பாளர்கள் அடங்குவர். இதுபோக தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி மற்றும் அனைத்து இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் ஆகிய கட்சிகளின் தலா ஒரு வேட்பாளரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கப்பட்டனர்.
முரண்டு பிடிக்கும் மதிமுக
திமுகவின் அறிவுறுத்தல் பல கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அந்த கட்சியின் உறுப்பினரை போன்றே சட்டப்பேரவையில் செயல்பட வேண்டி இருக்குமென கவலைகொள்கின்றனராம். அரசின் முடிவுகளில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், அதை எதிர்க்க முடியாத சூழல், கொறாடா உத்தரவை மீறினால் பதவியை இழக்கும் அபாயம் ஆகியவை கூட்டணி கட்சியை கல்லக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளுக்கான கட்சிகளுக்கு இது பெரிய பிரச்னையாக இருக்காது என்றாலும், மதிமுக போன்ற மாநில அளவிலான கட்சிகளுக்கு சிக்கலாக மாறியுள்ளது.
காரணம், தனிச் சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கியை உறுதி செய்தால் மட்டுமே, மாநில கட்சி என்ற தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற முடியும். அதைவிடுத்து உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டால், தங்கள் கட்சிக்கான அங்கீகாரமும், தனித்துவமும் காற்றோடு கரைந்துவிடக்கூடுமெனவும், எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அஞ்சுகிறார். அதன் காரணமாகவே, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியிலேயே இருந்தாலும் முரண்டு பிடித்து தனி சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதே பாணியில் வரும் சட்டமன்ற தேர்தலிலும், தனி சின்னத்தில் போட்டியிடவே விரும்புகிறாராம்.
மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை என்ன?
2026 சட்டமன்ற தேர்தல் மூலம் கட்டாயம் சட்டப்பேரவைக்குள் நுழைவதோடு, கட்சியின் அங்கீகாரத்தையும் தக்க வைத்துகொள்ள வேண்டுமென்ற முனைப்பிலேயே திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. எனவே அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை. மீண்டும் சினிமா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள கமல்ஹாசன், கட்சியை வளர்க்க வேண்டியதில்லை என நினைத்தால் தாராளமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இரண்டு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனித நேய மக்கள் கட்சி, இந்த முறை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புன் எழுந்துள்ளது. இதுபோக, கடந்த சட்டமன்ற தேர்தலில் முறையே 3 மற்றும் 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் தங்களது முடிவை மறுபரீசிலனை செய்யலாம் என கூறப்படுகிறது.
இதனால் தொகுதிப் பங்கீடு மட்டுமின்றி, எந்த கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற குழப்பமும் திமுக கூட்டணியில் நிலவுவதாக தெரிகிறது.
